
சென்னை,
சென்னையில் உள்ள தமிழக அரசின் டாஸ்மாக் தலைமை அலுவலகம், குடோன் மற்றும் பல்வேறு மதுபான தொழிற்சாலைகளின் அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த 6-ந்தேதி அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இந்த சோதனை குறித்து அமலாக்கத்துறை ஒரு செய்திக்குறிப்பு வெளியிட்டது.
அதில், தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடி ஊழல் நடந்துள்ளது என்று அமலாக்கத்துறை குற்றம்சாட்டி இருந்தது. இந்நிலையில், அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டு குறித்து தி.மு.க. எம்.பி. கனிமொழியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த கனிமொழி எம்.பி., "அமலாக்கத்துறை எதற்காக பயன்படுத்தப்படுகிறது என்பது மக்களுக்கு தெரியும். பா.ஜ.க. ஆட்சி செய்யாத மாநிலங்களில் இருக்கும் அரசுகளுக்கு எதிராக பயன்படுத்தக்கூடிய ஒரு துறையாக அமலாக்கத்துறை மாறியிருக்கிறது" என்று தெரிவித்தார்.