புழல்: செங்குன்றம் அருகே புதிய டாஸ்மாக் கடையை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பெண்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. செங்குன்றம் அடுத்த மாதவரம் – ஞாயிறு மாநில நெடுஞ்சாலை விளாங்காடுப்பாக்கம், துரைசெட் பேருந்து நிறுத்தம் அருகில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனையறிந்த, விளங்காடுபாக்கம் கிராம மக்கள் மற்றும் பெண்கள் ஒன்றுதிரண்டு, புதிதாக திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறிய டாஸ்மாக் கடையின் முன் நின்று, புதிய டாஸ்மாக் கடையை திறக்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து, ‘வேண்டாம்… வேண்டாம்… மதுக்கடை வேண்டாம், பெண்களை அச்சுறுத்தும் மதுக்கடை வேண்டாம், குடும்பங்களை சீரழிக்கும் மதுக்கடை வேண்டாம், திறக்காதே திறக்காதே… மதுக்கடையை திறக்காதே’ என கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து, தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த செங்குன்றம் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மதுக்கடை திறந்தால் தங்களுக்கு பாதுகாப்பு இருக்காது, பெண்கள் அச்சமின்றி நடமாட முடியாது எனவும், தங்களது கிராமத்தில் எக்காரணம் கொண்டும் டாஸ்மாக் கடையை திறக்க அனுமதிக்க முடியாது. காலை முதல் வேலைக்கு செல்லும் பெண்கள் பணி முடித்து இரவில் தனியாக வீடு திரும்புகையில் குடிகாரர்களால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருக்கும் என்றும் பெண்கள் திட்ட வட்டமாக தெரிவித்தனர்.
தொடர்ந்து, போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, தற்போது வரை காவல்துறையோ, வருவாய் துறையோ எந்த அனுமதியும் வழங்கவில்லை எனவும், மதுக்கடை திறக்கும் திட்டம் இல்லை என்றும் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து, போராட்டத்தை கைவிட்டு பெண்கள் மற்றும் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
The post டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு பெண்கள் முற்றுகை போராட்டம்: செங்குன்றம் அருகே பரபரப்பு appeared first on Dinakaran.