*ஆன்லைன் புக்கிங் துவங்கியது
கோவை : தமிழ்நாட்டில் கோவை, நீலகிரி உள்பட 40 இடங்களில் தமிழ்நாடு மலையேற்ற திட்டத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார். தொடர்ந்து மலையேற்றத்திற்கான ஆன்லைன் முன்பதிவுக்கான www.trektamilnadu.com என்ற பிரத்யேக இணையதளத்தையும் துவக்கி வைத்தார். இந்த மலையேற்றம் வழிகள் எளிதான, மிதமான மற்றும் கடினமான என 3 வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில், தலா 14 மலையேற்ற வழித்தடங்கள் எளிதான மற்றும் மிதமானதாக உள்ளது. 12 வழித்தடங்கள் கடினமானது ஆகும்.
இதில், கோவை மாவட்டத்தில் 7 இடங்களில் மலையேற்றத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, எளிதான மலையேற்றத்தில் ஆனைமலை புலிகள் காப்பகம் மானம்பள்ளி, மேட்டுப்பாளையம் பரளியாறு ஆகியவை ஆகும். இதில், மானம்பள்ளி மலையேற்றம் 10 கிலோ மீட்டர் தொலைவு, 3 மணி நேர பயணம் ஆகும்.
இதற்கு ரூ.1,499 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இப்பகுதியில், சாம்பார் மான், யானை, முதலை, சிங்கவால் குரங்கு, பறவைகளை பார்க்க முடியும். கோவை பரளியாறு 4 கிலோ மீட்டர் தொலைவு, 2 மணி நேர பயணம் ஆகும். இதற்கு ரூ.949 கட்டணம் ஆகும். புலி, சாம்பார் மான், யானை, கழுதை புலி போன்றவற்றை பார்க்க முடியும்.
மிதமான மலையேற்றத்தில் சாடிவயல் முதல் சிறுவாணி வரை 17 கிலோ மீட்டர் தொலைவு, 7 மணி நேர பயணம் ஆகும். இதற்கு ரூ.3,149 கட்டணமாகும். இந்த வழித்தடத்தில் புலி, கரடி, குரங்கு, யானை, புள்ளி மான்கள் பார்க்க முடியும். பொள்ளாச்சி ஆழியார் மிதமான மலையேற்றம் 8 கிலோ மீட்டர் தொலைவு, 3 மணி நேர பயணம். இதில், சாம்பார் மான், காட்டுமாடு, பறவைகள், யானைகளை பார்க்க முடியும். இதற்கு ரூ.1,999 கட்டணம் ஆகும். கடிமான வழித்தடமாக வெள்ளிங்கிரி, சேம்புக்கரை முதல் பெருமாள்முடி, டாப்சிலிப் ஆகிய 3 மலையேற்ற இடத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதில், வெள்ளிங்கிரி 12 கிலோ மீட்டர் தொலைவு, 10 மணி நேர பயணம், ரூ.5,099 கட்டணம் ஆகும். சேம்புக்கரை முதல் பெருமாள் முடி வரை 9 கிலோ மீட்டர் தொலைவு, 5 மணி நேர பயணம், ரூ.2,949 கட்டணம் ஆகும். மேலும், டாப்சிலிப் 8 கிலோ மீட்டர் தொலைவு, 4 மணி நேர பயணம், ரூ.4,699 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கட்டணத்துடன் கூடுதலாக 5 சதவீதம் ஜிஎஸ்டி கட்டணம் செலுத்த வேண்டும்.
இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், ‘‘கோவை மாவட்டத்தில் தலா 2 எளிதான மற்றும் மிதமான மலையேற்றத்திற்கும், 3 கடினமான மலையேற்றத்திற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த மலையேற்றத்திற்கு www.trektamilnadu.com என்ற இணையதளத்தில் சென்று புக்கிங் செய்ய வேண்டும். இந்த இணையதளத்தில் மலையேற்றத்தின்போது பின்பற்ற வேண்டியவை குறித்த முழு தகவல்கள் மற்றும் மலையேற்ற பாதைகள் குறித்த வீடியோ, புகைப்படங்கள், கட்டணம் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளது. இதனை மலையேற்றத்தில் ஈடுபட உள்ளவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்’’ என்றனர்.
The post டாப்சிலிப், வெள்ளிங்கிரி உள்பட 7 இடங்களில் டிரெக்கிங் செல்ல அனுமதி appeared first on Dinakaran.