டாக்டர் மீது கத்திக்குத்து: காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்த அரசு டாக்டர்கள் சங்கம்

1 week ago 4

கிண்டி,

சென்னை கிண்டியில் கலைஞர் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில், புற்றுநோய் துறையில் பாலாஜி ஜெகன்நாதன் என்பவர் டாக்டராக வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில், தனது தாய்க்கு சரியாக சிகிச்சை அளிக்கப்படவில்லை என விக்னேஷ் என்பவர் குற்றம்சாட்டி வந்ததாகத் தெரிகிறது. ஒரு கட்டத்தில், ஆத்திரம் அடைந்த விக்னேஷ், டாக்டர் பாலாஜியை கத்தியால் குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த டாக்டர் பாலாஜி, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது நெஞ்சில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், விக்னேஷ் உட்பட 4 பேரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதனையடுத்து கிண்டி கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

இந்த சம்பவத்தை தொடர்ந்து கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "புற்றுநோய் பிரிவில் பணியாற்றி வந்த டாக்டர் பாலாஜிக்கு கத்தி குத்து சம்பவம் நடந்துள்ளது. தனது தாய்க்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என கூறி, டாக்டரை கத்தியால் குத்தியுள்ளனர். கத்தியால் குத்திய இளைஞர்கள் 4 பேரை பிடித்து மருத்துவமனை ஊழியர்கள் போலீசில் ஒப்படைத்துள்ளனர். கத்தியால் குத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

வட மாநிலத்தை சேர்ந்தவர் என்று தவறாக கூறப்பட்டிருக்கிறது. ஆனால் அவர் தமிழகத்தை சேர்ந்த விக்னேஷ் என்பவர் ஆவார். பெருங்களத்தூரைச் சேர்ந்த விக்னேஷ் கைது செய்யப்பட்டு இருக்கிறார். அவரது தாய் காஞ்சனா கடந்த 6 மாதமாக இந்த மருத்துவமனையில் புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்று வந்தார். சிறந்த சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்களாகவே மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்து அழைத்துச் சென்றுள்ளனர். அவர் ஏற்கனவே இதே மருத்துவமனையில் உதவியாளராக இருந்ததால், எப்போதும் போல மருத்துவமனைக்கு வருவது போல வந்து பாக்கெட்டில் கத்தி வைத்துக் கொண்டு வந்து தாக்குதல் நடத்தி விட்டார்" என்று தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்து அதிர்ச்சி தெரிவித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளபதிவில், "கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் பாலாஜி அவர்களை நோயாளியின் குடும்ப உறுப்பினர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. இக்கொடுஞ்செயலில் ஈடுபட்ட நபர் உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். டாக்டர் பாலாஜி அவர்களுக்குத் தேவையான அனைத்து சிகிச்சைகளை அளித்திடவும், இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்திடவும் ஆணையிட்டுள்ளேன்.

அரசு மருத்துவமனைகளை நாடி வரும் நோயாளிகளுக்கு நேரம் - காலம் பார்க்காமல் உரிய சிகிச்சை அளிப்பதில் நமது அரசு டாக்டர்களின் தன்னலமற்ற பணி அளப்பரியது. இப்பணியின்போது அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் நம் அனைவரின் கடமையாகும். இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுத்திடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும்" என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் டாக்டர் மீது கத்திக்குத்து நடத்தப்பட்ட சம்பவத்தை கண்டித்து, காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அரசு டாக்டர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இதன்படி தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவகல்லூரிகளில் அவசரகால சிகிச்சை, மற்றும் உயிர் பாதுகாப்பு சிகிச்சை தவிர்த்து அனைத்து துறை அரசு டாக்டர்களும், காலவரையற்ற பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அரசு டாக்டர்கள் சங்கம் அறிவித்துள்ளது. 

Read Entire Article