மதுரை: மேலூர் பகுதியில் டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை நிரந்தரமாக கைவிடக் கோரி மத்திய அமைச்சர் கிஷன்ரெட்டியை நாளை நேரில் சந்தித்து வலியுறுத்த மதுரையிலிருந்து 11 பேர் குழு இன்று டெல்லி சென்றுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தை கைவிடக் கோரி மேலூர் பகுதி மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதையடுத்து, அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அனுமதி வழங்கக் கூடாது என மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் அமைச்சர் பி.மூர்த்தி, ஆட்சியர் சங்கீதா மற்றும் அதிகாரிகள் அரிட்டாபட்டிக்கு நேரில் சென்று போராட்டக்குழுவிடம் பேசி டங்ஸ்டன் சுரங்கம் வராது என உறுதியளித்தனர்.