அரியலூர், அக்.1:அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையம் சார்பில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் பிரசார வாகனத்தை கலெக்டர் ரத்தினசாமி, கொடியசைத்து துவக்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க, அரியலூர் மாவட்டம், அரியலூர் அரசு கலை கல்லூரி வளாகத்தில் வருகிற அக்டோபர் 5ம் தேதி (சனிக்கிழமை) மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாம் தொடர்பான பிரசார வாகனத்தை மாவட்ட கலெக்டர் ரத்தியசாமி நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த வாகனத்தின் மூலம் அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் குறித்து பிரசாரம் மேற்கொள்ளப்படவுள்ளது.
இவ்வேலைவாய்ப்பு முகாமில் 20,000-க்கும் மேற்பட்ட பணி வாய்ப்புகள் வழங்கிடும் வகையில் 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்துகொள்ள உள்ளன. மேலும், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்காக உதவித்தொகை திட்டத்தின் கீழ் உதவித்தொகை பதிவுகளும், சுய தொழில் தொடங்குவதற்கான ஆலோசனைகள், தொழில் பழகுநர் பயிற்சிக்கான சேர்க்கை முகாம்களும். தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தில் வழங்கப்படும் இலவச பயிற்சி வகுப்புகளுக்கான சேர்க்கை முகாம்களும், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளுக்கான விண்ணப்பங்களும், அயல்நாட்டு வேலைவாய்ப்புக்கான வேலைவாய்ப்புக்கான ஆலோசனை முகாம்களும், அரசுப் பணி போட்டித்தேர்வுகளுக்கான இலவச பயிற்சிகளுக்கான மாணவர்கள் சேர்க்கைகளும் நடைபெறவுள்ளது. 18 முதல் 45 வயது வரை உள்ள 5-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்த அனைவரும் கலந்துகொள்ளலாம். எனவே இவ்வேலைவாய்ப்பு முகாமினை அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் அனைவரும் பயன்படுத்திக்கொண்டு வேலைவாய்ப்பினை பெற வேண்டும் என மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி, தெரிவித்தார்.
இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பரிமளம், அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கலைச்செல்வன், வட்டாட்சியர் (பேரிடர் மேலாண்மை) சந்திரசேகரன், வேலைவாய்ப்பு உதவியாளர் ராஜா மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
The post ஞாயிறு தோறும் இளைஞர்கள் பயன்பெற கலெக்டர் அழைப்பு appeared first on Dinakaran.