
சென்னை,
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் கடந்த டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில், சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி 3 பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகள் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அமைக்கப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.
இந்தக் குழுவினர் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு மற்றும் அது தொடர்பான முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) வெளியான விவகாரம் குறித்து தனித்தனியாக விசாரிக்கின்றனர். வழக்குக்கான ஆதாரங்களையும், தடயங்களையும், சாட்சிகளையும் திரட்டும் வகையில் ஞானகேரனை சிறப்பு புலனாய்வுக் குழு, ஒரு வாரம் தங்களது காவலில் எடுத்து விசாரித்தது. மேலும், அவருக்குக் குரல் பரிசோதனையும் செய்யப்பட்டது. அதேபோல அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் ரத்தப் பரிசோதனை நடத்தப்பட்டது. குரல் பரிசோதனை போன்று ரத்தப் பரிசோதனையும் பாலியல் வன்கொடுமை வழக்கில் முக்கியத் தடயமாகக் கருதப்படுகிறது.
இந்நிலையில், சென்னை சைதாப்பேட்டை 9-ஆவது நீதித் துறை நடுவர் மன்றத்தில், சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் இணையவழியில் இவ்வழக்கில் நீதித் துறை நடுவர் சுப்பிரமணியத்திடம் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் ஞானசேகரனுக்கு உள்ள தொடர்பு குறித்து சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் குற்றப்பத்திரிகையில் விவரித்துள்ளனர். மேலும், இந்த வழக்கில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், ஞானசேகரனின் கைப்பேசி உரையாடல்கள் அனைத்தும் இடம்பெற்றுள்ளன.
இந்த சூழலில் சைதாப்பேட்டை கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து ஞானசேகரன் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு, அல்லிக்குளத்தில் உள்ள மகளிர் கோர்ட்டுக்கு மாற்றம் செய்யப்பட்டது.
இந்நிலையில் அண்ணா பல்கலை. மாணவி வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அடைத்ததை எதிர்த்து அவரது தாய் ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். நாளை மறுதினம் இந்த மனு விசாரணைக்கு வரும் என தகவல் வெளியாகி உள்ளது.