
சென்னை,
அண்ணா பல்கலை., மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மாணவி புகாரளித்து ஐந்து மாதங்களில் விசாரணை முடிக்கப்பட்ட நிலையில், சென்னை மகளிர் கோர்ட்டு நீதிபதி ராஜலட்சுமி தீர்ப்பு வழங்கினார்.
இதன்படி ஞானசேகரன் மீது சுமத்தப்பட்ட 11 குற்றச்சாட்டுகளும் நிரூபணமாகி உள்ளதாக நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்தார். மேலும் ஞானசேகரனுக்கான தண்டனை விவரங்கள் ஜூன் 2-ம் தேதி அறிவிக்கப்பட்டும் என்றும், தண்டனை விவரம் வெளியாகும் வரை அவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி ராஜலட்சுமி உத்தரவிட்டார்.
இந்நிலையில் தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை நடத்திய தி.மு.க. நிர்வாகி ஞானசேகரன், குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது வரவேற்கத்தக்கது.
பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளும், பாலியல் குற்றங்களும், கடுமையாகக் கையாளப்பட வேண்டும். இது போன்ற குற்றங்கள் மீண்டும் நடக்காதபடி, நீதிமன்றம் கடுமையான தண்டனை வழங்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.