ஜோதிடத்தில் பரிகாரம் என்பது விஞ்ஞானம்

3 months ago 26

தினந்தோறும் உங்களுக்கு நீங்களே பரிகாரம் செய்துகொள்கிறீர்கள் என சொன்னால் நம்புவீர்களா? ஆம், ஒவ்வொருவரும் தினந்தோறும் அவரவர்களுக்கே பரிகாரம் செய்து கொள்கிறோம். உண்ணுதல், குளித்தல், உறங்குதல், நடத்தல், ஓடுதல், படித்தல், கேட்டல், பார்த்தல், வாசனையை நுகர்தல், இயற்கையை ரசித்தல், உதவி செய்தல்…. இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். இதை தினந்தோறும் வழக்கமாக செய்வதால் அது நமக்கு பரிகாரமாக தெரிவதில்லை.சிலரின் ஜாதகத்தில் 9ம் அதிபதி சில குறிப்பிட்ட இடங்களில் அமர்ந்தால் அவர்களின் செயல் அவர்களுக்கு தெரிந்தோ தெரியாமலோ பரிகாரமாக இருக்கும். ஆதலால், அவர்களுக்கு பரிகாரம் ஒன்று தனியாக ஏற்படாது. ஒரு குறிப்பிட்ட செயலுக்கு பலன் கிடைக்கச் செய்யும் ஒரு குறிப்பிட்ட செயலை நமக்கு ஜோதிடர் சொல்லும்போதுதான் அது நமக்கு பரிகாரமாக புலப்படுகிறது.

பரிகாரம் என்பது எப்படிப்பட்டது?

பரிகாரம் என்பதை நாம் இணையான செயல் அல்லது மாற்றுச்செயல் என்றே எடுத்துக்கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு, வீட்டிலிருந்து வெளியே ஓரிடத்திற்கு செல்கிறோம். வழி நெடுக பல பொருட்கள் இருக்கும். அது நமது பாதங்களை தொந் தரவு செய்துவிடக்கூடாது என்பதற்காக காலணிகளை அணிந்து செல்வதே அப்போதைய பரிகாரம். நன்றாக வெயில் அடிக்கிறது அல்லது நன்றாக மழை பெய்கிறது என வைத்துக்கொள்வோம். அப்பொழுது நாம் நனையாமல் இருப்பதற்காக ஒரு குடையை கையில் எடுத்துச் செல்கிறோம். அப்பொழுது அந்த குடையை பயன்படுத்துவதே நமக்கு பரிகாரம்.அதைத்தான் அறிவு / அறிவியல் என்கிறோம்.

கிரகங்கள் வெளிப்படுத்தும் எனர்ஜி…

அறிவியல் அடிப்படையில் சொல்வதென்றால், பாசிடிவ், நெகடிவ் எனர்ஜி என எடுத்துக்கொள்ளலாம். பாசிடிவ் எனர்ஜியை யோகம் எனவும், நெகடிவ் எனர்ஜியை தோஷம் எனவும் கொள்ளலாம். நாம் இருக்கும் நிலையிலிருந்து மேல் நிலைக்கு ஆரோக்கியம் மற்றும் பொருளாதாரத்தால் உயர்கிறோம் எனில் அது பாசிடிவ் எனர்ஜி. ஆரோக்கியம் மற்றும் பொருளாதாரம் குறைவதை நெகடிவ் எனர்ஜி என புரிந்து கொள்வோம். எல்லா கிரகங்களும் குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட நேரத்தில் பாசிடிவ் எனர்ஜியையும் நெகடிவ் எனர்ஜியையும் வெளிப்படுத்தும். நம்மிடம் உள்ள பொறாமை, கோபம், எரிச்சல், பொய் சொல்லுதல், பேராசைப் படுதல், அடுத்தவரின் பொருளுக்கு ஆசைப்படுதல், அபகரித்தல், சுயநலத்துடன் இருத்தல் போன்றவை எல்லாமே நெகடிவ் எனர்ஜி. இவை நமக்கும் மற்றவருக்கும் துன்பத்தை தரும் என்பதை அறிந்தும் அறியாமலும் செய்கிறோம். எல்லா விஷயங்களையும் பரிகாரத்தினால் சரி செய்ய இயலாது.

பரிகாரத்தின் வகைகளும் முறைகளும்…

* உதாரணத்திற்கு, ஒருவருக்கு திருமணம் தொடர்பான கேள்விகள் வரும்போது அவருடைய ஜாதகத்தில் திருமணம் நடைபெறாததற்கு திருமணத்தை நிகழ வைக்கும் கிரகங்கள் இயங்காமல் உள்ளதா? அல்லது திருமணத்திற்காக இயங்கும் கிரகத்திற்கு மற்றொரு கிரகம் தடையாக உள்ளதா என ஆராய்ந்து. இயங்காமல் இருந்தால் இயக்கும் கிரகமாக மாற்ற சில பரிகார முறைகளைச் சொல்லலாம். அல்லது தடையாக இருந்தால் தடை செய்கின்ற கிரகத்திற்கு பரிகாரம் அமையலாம்.
*கிரகங்களின் ஆற்றலைப்பெற்றுக் கொள்வதற்கான பரிகாரம், நீங்கள் குறிப்பிட்ட கிரகத்தின் ஆற்றலைப்பெற்றுக் கொள்வதற்கு அந்த கிரகத்தின் தேவதைகள் அல்லது இடங்கள் அல்லது பொருட்களை உங்களுடன் வைத்துக்கொள்ளும் போது அந்த குறிப்பிட்ட கிரகத்திற்குரிய ஆற்றலைப் பெற்று பயனடையலாம்.
* கிரகங்களின் ஆற்றலை குறைப்பதற்கான பரிகாரம். நீங்கள் குறிப்பிட்ட கிரகத்தின் ஆற்றல் இயல்பாக அதிகமாக இருந்தால் அதனை தானங்கள் மூலமோ அல்லது வேறு வழிகளிலோ குறைத்து பயனடையலாம்.

பரிகாரத்தில் பாக்கியம், பிராப்தம் என்றால் என்ன?

பரிகாரத்தில் பாக்கியம் என்றால் ஒரு குறிப்பிட்ட விஷயத்திற்காக உங்களுக்கு ஜோதிடர் நீங்கள் இப்படித்தான் பரிகாரம் செய்ய வேண்டும் என சொன்னால் அது உங்களுக்கு கிடைத்த பாக்கியம். அந்த பரிகாரத்தை எப்படிச் செய்கிறோம்… அதற்கான சூழ்நிலைகள் எப்படி அமைகிறது என்பது பரிகாரத்திற்கான பிராப்தம் ஆகும்.

பரிகாரத்தை எப்படி செய்ய வேண்டும்?

பரிகாரத்தை ஜோதிடர் குறிப்பிட்டபடி, குறிப்பிட்ட கிழமைகளில் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட கோயிலிலோஅல்லது வீட்டிலோதான் செய்ய வேண்டும் எனச் சொன்னால் அதை அந்த வழிமுறைப்படிதான் செய்ய வேண்டும்.அவ்வாறு செய்யும் பட்சத்தில் அந்த பரிகாரம் அந்த ஜாதகருக்கு அடுத்தவழிமுறையை காட்டும்.

பரிகாரத்தின் விஞ்ஞான உண்மைகள்…

* வீட்டில் ஏதேனும் நோய்களால் யாராவது பாதிக்கப்பட்டால் அவர்களை வீட்டில் விளக்கேற்றி வழிபாடு செய்யச் சொல்வார்கள். அதன் உட்பொருள் விளக்கேற்றும் போது விளக்கில் உள்ள ஜுவாலையானது காற்றில் தொடர்பு கொண்டு காற்றை வெப்பப்படுத்து
கிறது. அவ்வாறு வெப்பப்படுத்தும்போது காற்றில் உள்ள வைரஸ் கிருமிகள் அழிந்து தூய்மையான காற்றை நாம் சுவாசிக்கிறோம்.
* புனித நதிகளில் நீராடி அருகில் உள்ள கோயிலுக்கு சென்று வரவேண்டும் என பரிகாரம் இருந்தால் புனித நதிகள் அருவிகளாக பிரவாகமாகி பல மூலிகைகளையும் பல செடி, கொடிகளையும் இழுத்துக் கொண்டு வருகிறது. அவ்வாறு வரும் நதியானது மூலிகை கலந்த மருந்துகளை இயற்கையாக சுமந்து வருகிறது. அந்த புனித நதியில் நீராடும் போது நமக்கு மூலிகைகள் குணமடைய செய்யும் தன்மையுடையதாக நம்மை மாற்றுகின்றது.
* சில கோயில்களுக்கு சென்று விளக்கேற்றி அர்ச்சனை செய்வது பரிகாரமாக வந்தால், ஒவ்வொரு கோயில்களும் ஒரு குறிப்பிட்ட சக்தியை ஈர்க்கும் தலங்களாகவும் ஒரு குறிப்பிட்ட சக்தியை உற்பத்தி செய்து அந்த சக்தியை வெளிப்படுத்தும் தலங்களாகவும் உள்ளதை நம் முன்னோர்கள் ஆய்ந்தறிந்துள்ளனர். அந்த சக்தியை அங்கு பெற்றுக் கொள்கிறோம். சில குறிப்பிட்ட சக்தி நம்மிடம் அதிகம் இருக்கும் பட்சத்தில் சில கோயில்கள் நம்மிடம் இருந்து வெளிப்படும் சக்தியை தானாகவோ அல்லது தானமாக வழங்கும் பொருட்கள் மூலமாகவோ அந்த சக்தி நம்மிடம் இருந்து வெளியேறி விடுகின்றன.
* வாரத்தின் ஏழு நாட்களும் கிரகங்கள் ஒவ்வொன்றும் வரிசையாக குறிப்பிட்ட கிரகத்தின் கதிர்களை உமிழ்கின்றன. அந்த நாட்களே அந்த கிரகத்தின் பெயர்களாக உள்ளது. நமக்கு கிடைக்கக்கூடிய பாசிடிவ் எனர்ஜியை அந்த கிரகத்தின் நாட்களில் பெற்றுக்கொள்வது என்பதே உண்மையான அறிவியல்.
* முப்பது வருடங்களுக்கு முன் குழந்தை பிரச்னை என்பதே இல்லை. இப்பொழுது இந்தப் பிரச்னைக்கு ஏராளமாக செலவுகள் செய்து குழந்தை பெற்றுக் கொள்வதே ஒரு சாதனையாக உள்ளது. முப்பது வருடங்களுக்கு முன் ஏராளமான மரங்கள் இருந்தன. ஆகவே, தூய்மையான காற்று இருந்தது. தூய காற்று இல்லாததால் பெண்களுக்கு கர்ப்பப்பை பிரச்னை உள்ளது. இதற்கு அரச மரம் சுற்றிவர வேண்டும். இந்த அரச மரத்தை சுற்றினால் தூய காற்று சுவாசிக்கும் சூழ்நிலை உண்டாகும். ஆதலால் கர்ப்பப்பை பிரச்னைகள் குணமாகும். உண்மையான அறிவியல் இயற்கை நமக்கு கற்றுத்தருவதே ஆகும்.
* பலருக்கு உணவினை தானம் செய்தல் எப்படி? பசி பட்டினியால் வாடுபவர்களுக்கு நாம் உணவினை வழங்கும்போது அவர்கள் மனதில் நம்மைப்பற்றி நல்சிந்தனையும் வாழ்த்தும் உருவாகும். அதுவே நமக்கான பாசிடிவ் எனர்ஜியை நமக்கு தருகின்றது. அப்படி கிடைக்கும் பாசிடிவ் எனர்ஜியால் நம்மிடம் உள்ள நெகடிவ் எனர்ஜி குறைகிறது என்பதே பரிகாரத்தின் அறிவியல் உண்மை. நம்மிடம் உள்ள பாசிடிவ் எனர்ஜியை அதிகம் உற்பத்தி செய்து கொள்வதே சிறந்த பரிகார முறை மற்றும் அறிவியல் ஆகும்.

கலாவதி

The post ஜோதிடத்தில் பரிகாரம் என்பது விஞ்ஞானம் appeared first on Dinakaran.

Read Entire Article