
சென்னை,
தமிழ்நாடு சட்டசபையில் அரசினர் தனித் தீர்மானத்தை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (02.04.2025) முன்மொழிந்தார். அதில், "கச்சத்தீவைத் திரும்பப் பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும், கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் மீன்பிடி படகுகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து முதல்-அச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றுகையில், "தமிழ்நாட்டைச் சார்ந்த இந்திய மீனவர்களின் நலன் கருதி, அனைத்துக் கட்சிகளும் இந்தத் தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றித் தர வேண்டுகிறேன்" என்று கேட்டுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து இந்த தனித் தீர்மானத்திற்கு அ.தி.மு.க., பா.ஜ.க. என அனைத்து கட்சியும் ஆதரவு அளித்தனர். இதனையடுத்து சபாநாயகர் அப்பாவு இந்த தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டதாக அறிவித்தார்.
இதற்கிடையே இந்த தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான செல்வப்பெருந்தகை கச்சத்தீவு விவகாரத்தில் ஜெயலலிதா குறித்து சில கருத்துகளைப் பகிர்ந்தார். அப்போது அ.தி.மு.க.வின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன், "முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா குறித்து செல்வப்பெருந்தகை தவறாக விமர்சித்துப் பேசுகிறார். இதனை அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் பார்த்துக் கொண்டிருக்கலாமா?. எனவே அனைவரும் எழுந்து எதிர்ப்பு தெரிவியுங்கள்" என்று ஆவேசமாக கூறினார்.
இதனையடுத்து அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் செல்வப்பெருந்தகை பேசிய கருத்துகள் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டன.