‘‘தமிழ்க்கடவுள் தரிசனத்திற்கு முத்துநகர் வந்த சின்ன மம்மி ஓபிஎஸ், இபிஎஸ்பற்றி வாய் திறக்கவில்லையாமே..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா.
‘‘தமிழ்க்கடவுள் முருகனின் வழிபாட்டிற்காக தலைநகரில் இருந்து முத்துநகருக்கு வந்திருந்தார் சின்ன மம்மி. சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், சின்ன மம்மி ஏதாவது கமெண்ட் கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பு இலை கட்சியினர் மத்தியில் இருந்தது. ஏற்கனவே மக்கள் சந்திப்பு பயணம் என்ற பெயரில் ‘காசி’ன்னு முடியும் புதிய மாவட்டத்திலும், அல்வா மாவட்டத்திலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார் சின்ன மம்மி. அப்போது அவருக்கு எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு இல்லை. இதனால் அந்த சந்திப்பு பிசுபிசுத்துப் போனது. இந்நிலையில் தமிழ்க்கடவுளை வழிபட்ட சின்ன மம்மி. அங்கு சத்ரு சம்ஹார மூர்த்தியையும் வழிபட்டாராம்.. முன்னதாக, முத்துநகர் விமான நிலையத்தில் பேட்டி அளித்த அவர் இபிஎஸ், ஓபிஎஸ் குறித்து வாய்கூட திறக்கவில்லையாம்.. முன்பெல்லாம் இபிஎஸ்சை பற்றி ஏதாவது தனது பேட்டியில் சின்ன மம்மி கூறுவார். ஆனால் இந்த முறை அதுபோன்ற எந்த பதிலும் சின்ன மம்மியிடம் இருந்து இல்லை. அவரை வரவேற்க பெரிய ஆதரவாளர் பட்டாளமும் இல்லை. அவரது அரசியல் எல்லாம் முடிஞ்சு போச்சு என்கின்றனர் முத்து மாவட்ட இலைகட்சியினர்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘உயர் அதிகாரியின் கோபம் தணியுமா என காத்திருக்கிறாங்களாமே மாங்கனி ஜெயில் கைதிகள்..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘மாங்கனி மாநகரில் சென்ட்ரல் ஜெயில் ஒண்ணு இருக்குது.. நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட வீரர்களை கொடுமைப்படுத்துவதற்காகவே இந்த ஜெயிலை வெள்ளைக்காரங்க கட்டியிருக்காங்க.. ஒருவரை ஒருவர் முகம் பார்க்க முடியாத வகையில் இதன் அறைகளை அமைச்சிருக்காங்க.. 162 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த ஜெயில் இன்னும் கம்பீரமாகத்தான் இருக்கு.. இந்த ஜெயிலில் இருக்கும் கைதிகளுக்கு கடும் வேலையை கொடுக்கும் வகையில் இரும்பு கதவுகளை செய்ய தொழிற்சாலையையும் அமைச்சிருக்காங்க.. இதற்கான மூலப்பொருட்களை இங்கிலாந்தில் இருந்து கொண்டுவந்ததாகவும் சொல்லப்படுது.. அந்த தொழிற்சாலை இன்னும் இயங்கிக்கிட்டு இருக்கு.. இங்கு 40 கைதிகள் வேலை செஞ்சிக்கிட்டு இருக்காங்க… மருத்துவமனைகளுக்கு தேவையான கட்டில்கள் இங்கிருந்துதான் தயார் செய்யப்பட்டு அனுப்பப்பட்டு வருகிறது. இங்கு வேலை செய்யும் தண்டனை கைதிகளுக்கு சம்பளமும் வழங்கப்படுது.. ஆனா இந்த தொழிற்சாலையை சென்னை புழலுக்கு மாற்றப்போவதா ஜெயில் உயரதிகாரி உத்தரவு போட்டிருக்காரு.. இதனால 40 கைதிகளும் தங்களின் வாழ்வாதாரம் முடிஞ்சிப்போச்சா என புலம்பிக்கிட்டிருக்காங்க.. மாங்கனி ஜெயிலுக்கு வந்த அந்த அதிகாரியை சந்திச்சு தொழிற்கூடங்களை மாற்றாதீங்க அய்யான்னு கெஞ்சிருக்காங்க.. அதற்கு எந்த பதிலும் கிடைக்கலையாம்.. எந்தெந்த ஜெயிலுக்கு எந்த புதிய தொழில் தொடங்க வேண்டும் என்றாலும் அரசிடம் கூறினால் அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதைவிடுத்து சேலத்தில் இருக்கும் தொழிலை ஏன் புழலுக்கு கொண்டு போகணும் என்ற கேள்வியும் எழும்பியிருக்கு.. அதுல புது தகவலும் வெளியானதாம்.. இந்த பிரிவில் வேலை செய்யும் ஒருவரை, புழலில் தங்கியிருந்து வேலை ஒன்றை செய்ய சொன்னாங்களாம்.. ஆனால் அவரோ சென்னையில் தங்கியிருக்க முடியாதுன்னு சொல்லிட்டாராம்.. இது அந்த உயரதிகாரியின் காதுக்கு வேகமா போய் சேர்ந்ததாம்.. இதனால கோபம் அடைந்த அவரோ, தொழிற்சாலையை மாற்றினால் எல்லாம் சரியாகிடும் என்ற கோபத்துல உத்தரவு போட்டதா சொல்றாங்க. அந்த உயரதிகாரியின் கோபம் தணியுமா என மாங்கனி கைதிகள் ஆவலோடு காத்திருக்காங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘சம்திங் வாங்கி கொடுக்கணும்னு ஒரே டார்ச்சர் செய்றாராமே அதிகாரி.’’ எனக்கேட்டர் பீட்டர் மாமா.
‘‘கிரிவலம் மாவட்டத்துல 15வது மாநில குழு திட்டத்தின் மூலமாக பணிகள் நடந்து வருகிறதாம்.. இந்த பணிகள் அனைத்துக்கும், ஊரக வளர்ச்சி துறையில இருக்குற ஆபிசர் பர்மிஷன் தரணுமாம்.. அவர் பர்மிஷன் இருந்தால்தான், திட்ட பணிகளுக்கான நிதி, சம்பந்தப்பட்ட ஊராட்சியோட வங்கி கணக்குக்கு போகுமாம்.. இதுல பர்மிஷன் வாங்க சம்பந்தப்பட்ட நபர்களை அந்த ஆபிசர் நேர்ல வரவழைச்சிடுறாராம்.. வரவெச்சி 2 பர்சன்டேஜ் கமிஷன் கேட்குறாராம்.. இப்ப பஞ்சாயத்து என்னென்னா, ஏற்கனவே கொடுத்ததுக்கும் கமிஷன் கேட்டா எப்படின்னு நோ சொல்றாங்களாம்.. இதனால, தன்னோட கண்ட்ரோல்ல இருக்குற வாசி, ஆறு, ஊர், மல்லூர்னு முடியுற ஒன்றியங்கள்ல பணிபுரியுற பிடிஓஸ், டெபுடி பிடிஓஸை, சம்திங் வாங்கி கொடுக்க சொல்லி டார்ச்சர் செய்றாராம்.. சில ஒன்றிய பிரசிடெண்ட்ஸ் கொடுக்கறாங்க. கொடுக்காதவங்களை நாங்க எப்படி கட்டாயப்படுத்துறதுன்னு, பிடிஓஸ் புலம்பல் சத்தம் மாவட்டம் முழுவதுமாக கேட்க ஆரம்பிச்சிடுச்சு. சம்பந்தப்பட்ட அதிகாரிங்க இதை என்னன்னு விசாரிச்சு நடவடிக்கை எடுக்கணும்னு குரல் ஒலிக்கத்தொடங்கி இருக்கிறதாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘ஜெயந்தி விழாவில் மற்ற மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் கடிந்து கொண்ட தேனிக்காரர் மீது கடும் அதிருப்தியில் இருக்காங்களாமே நிர்வாகிகள்..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘தென்மாவட்டத்தில் சமீபத்தில் நடந்த ஜெயந்தி விழாவிற்கு பல அரசியல் கட்சி தலைவர்கள் வந்து சென்றனர். அதேபோல் இலை கட்சி உரிமை மீட்பு குழு தலைவர் தேனிக்காரரும் வந்தாராம்… அப்போது அங்கு வந்திருந்த டெல்டா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளை தேனிக்காரர் சந்தித்து பேசியுள்ளார். மன்னர் மாவட்ட நிர்வாகிகளை சந்திக்கும் போது வர வர உங்கள் செயல்பாடுகளில் எனக்கு முழு திருப்தி இல்லை என மற்ற மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் பகிங்கரமாக கடிந்து கொண்டாராம்… அப்போது அமைதியாக இருந்த நிர்வாகிகள் தேனிக்காரர் புறப்பட்டு சென்ற பின்னர், மற்ற மாவட்ட நிர்வாகிகளிடம் தேனிக்காரர் மீது ஏற்கனவே 2வது கட்ட நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை கடும் அதிருப்தியில் இருந்து வருகிறார்கள். இலை கட்சியை மீட்டு தலைமை ஏற்பார் என ஆதரவாளர்களும் தனது சொந்த பணத்தில் தேனிக்காரருக்காக செலவு செய்து வந்தனர். ஆனால் தேனிக்காரர், இதுவரை இலை கட்சியை மீட்பதற்கான எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அடுத்த சட்டமன்ற தேர்தல் வரபோகுது. இனியும் தேனிக்காரை நம்பி இருந்தால் வீதிக்குதான் வரவேண்டியிருக்கும் என ஏற்கனவே அவர்கள் கோபத்தில் இருந்து வருகின்றனர். இந்த நேரத்தில் ஜெயந்தி விழாவிற்கு அழைத்தால் எப்படி வருவாங்க. தேனிக்காரர் வேற நிலைமை தெரியாமல் எங்களை கடிந்து கொண்டால் நாங்கள் என்ன செய்வதுன்னு அவர் மீதான அதிருப்தியில் புலம்பி சென்றார்களாம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.
The post ஜெயந்தி விழாவில் கடிந்துகொண்ட தேனிக்காரர் மீது நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் இருப்பது பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.