
சென்னை,
கடந்த 2024 ஏப்ரல் மாதத்தில் 'ஒரு நொடி' எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் தமன்குமார் கதாநாயகனாக நடித்திருந்தார். இவருடன் இணைந்து வேல ராமமூர்த்தி, எம்.எஸ். பாஸ்கர், தீபா சங்கர் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். கிரைம் திரில்லர் ஜானரில் மணிவர்மன் இயக்கத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பல்வேறு தரப்பினர் இடையே பாராட்டுக்களை பெற்றது.
இந்நிலையில் மணிவர்மன் – தமன்குமார் கூட்டணி மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்துள்ளது. இந்த படத்திற்கு 'ஜென்ம நட்சத்திரம்' என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தில் தமன்குமாருக்கு ஜோடியாக மால்வி மல்கோத்ரா நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இணைந்து காளி வெங்கட், முனீஷ்காந்த், தலைவாசல் விஜய், வேல ராமமூர்த்தி மற்றும் பலர் நடித்திருக்கின்றனர்.
இந்த படத்தை அமோகம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. ஹாரர் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் , டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்று இணையத்தில் வைரலானது. 'ஜென்ம நட்சத்திரம்' படம் வரும் 18ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

'ஜென்ம நட்சத்திரம்'படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. விழாவில் பேசிய நடிகர் தமன், " எக்ஸோர்சிஸ்ட்', 'ஓமன்', 'போல்டர்ஜிஸ்ட்' மற்றும் பல கிளாசிக் ஹாரர் படங்கள் இப்போதும் ரசிகர்களுக்கு பிடித்தமானதாக இருக்கிறது. 'ஜென்ம நட்சத்திரம்' படம் கிட்டத்தட்ட 'ஓமன்' படத்தின் தமிழ் வெர்ஷன் போல இருக்கும். இந்தப் படம் ஸ்பின் ஆப் போல அதாவது பிரீக்குவலாக இருக்கும். எப்படி 'ஒரு நொடி' படத்தின் கிளைமாஸ் ரசிகர்களுக்கு அதிர்ச்சியானதாக இருந்ததோ அதுபோல இந்தப் படத்தின் கிளைமாக்ஸூம் அதிர்ச்சியானதாகவும் கணிக்க முடியாததாகவும் இருக்கும். 'ஒரு நொடி' படத்தை விட இது இன்னும் மேம்பட்டதாக இருக்கும். 'ஒரு நொடி' படம் பார்த்தப் பிறகு எப்படி எங்கள் அனைவருக்கும் இந்த வாய்ப்பு வந்ததோ அதுபோலவே, இந்தப் படம் பார்த்த பிறகும் எங்கள் அனைவருக்கும் வாய்ப்பு வரும். தலைவாசல் விஜய் சாருடன் எனக்கு சில நாட்கள் மட்டுமே காம்பினேஷன் சீன் இருந்தது. 'ஜென்ம நட்சத்திரம்' படம் போலவே அடுத்த படத்திலும் ரசிகர்களுக்கு சிறந்த அனுபவத்தை கொடுப்போம். அனைவருக்கும் நன்றி" என்றார்.