போகாரோ: ஜார்கண்ட்டில் நக்சல்கள் மற்றும் பாதுகாப்புப் படைகளுக்கு இடையே நடந்து வரும் துப்பாக்கிச் சண்டையில், இதுவரை ஆறு நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஜார்கண்ட் மாநிலம் போகாரோ மாவட்டத்தின் லால்பனியா பகுதியில் நக்சல்கள் பதுங்கி இருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், மத்திய ரிசர்வ் காவல் படையின் கோப்ரா பிரிவு மற்றும் உள்ளூர் காவல்துறையினர் இணைந்து தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இந்த நடவடிக்கையின் போது, இன்று காலை 5.30 மணியளவில் லுகு மலைப் பகுதியில் பாதுகாபுப்புப் படைகளுக்கும், நக்சல்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் ஆறு நக்சல்கள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். உயிரிழந்தவர்களின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் இருந்து ஒரு எஸ்எல்ஆர், இரண்டு இன்சாஸ் ரைபிள்கள் மற்றும் ஒரு கைத்துப்பாக்கி உள்ளிட்ட பல ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
அந்தப் பகுதியில் இரு தரப்பிலும் துப்பாக்கிச் சண்டை தொடர்ந்து நடைபெறுகிறது. முன்னதாக, இம்மாதம் 14ம் தேதி, ஜார்கண்டின் மேற்கு சிங்பும் மாவட்டத்தில் 11 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் பாக்ரபேடா காட்டுப் பகுதியில் இரண்டு வெடிகுண்டுகள் கண்டறியப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
The post ஜார்கண்ட் மாநிலத்தில் 6 நக்சல்கள் சுட்டுக் கொலை appeared first on Dinakaran.