
ராஞ்சி,
நாட்டில் மனித மற்றும் விலங்கு மோதல் சம்பவங்கள் பற்றிய செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. வனவிலங்குகளின் வாழ்விட பகுதியில் மனிதர்கள் அத்துமீறும்போது, இதுபோன்று நடக்கிறது என்ற குற்றச்சாட்டும் கூறப்படுகிறது. வனப்பகுதி ஆக்கிரமிப்பால், விலங்குகள் ஊருக்குள் வருகின்றன என்றும் உணவு, தண்ணீர் தேடி அவை காட்டை விட்டு நகர பகுதிகளுக்கு வருகின்றன என்றும் கூறப்படுகிறது.
ஆனால், பயிர்களை சேதப்படுத்துகிறது என கூறி மின்வேலி வைத்து விலங்குகள் கொல்லப்படுவதும் தொடர்கிறது. இதனால், விலங்குகளின் வாழ்வும் பாதிக்கப்படுகிறது. இந்நிலையில், மனித-விலங்கு இணக்கத்திற்கான சில விசயங்களும் அவ்வப்போது நடந்து வருகின்றன.
இதுபோன்ற சம்பவம் ஒன்று ஜார்கண்டில் நடந்துள்ளது. இதில், பெண் யானை ஒன்று ரெயில்வே தண்டவாளம் அருகே நின்றபடி இருந்துள்ளது. அப்போது அந்த வழியே ரெயில் ஒன்று வந்துள்ளது. கர்ப்பிணியாக இருந்த அந்த யானை ரெயில்வே தண்டவாளம் அருகே 2 மணிநேரம் வரை நின்றபடியே இருந்தது.
இதன்பின்னர் கன்றை ஈன்றது. அந்த 2 மணிநேரமும் யானைக்காக ரெயில் காத்திருந்துள்ளது. சிறிது நேரம் சென்ற பின்னர் யானை கன்று எழுந்து நடக்க தொடங்கியது. இதனை தொடர்ந்து, கன்றுடன் யானை நடந்து சென்றது. அது பாதுகாப்பாக அந்த பகுதியை கடந்து சென்ற பின்னரே, ரெயில் புறப்பட்டு சென்றுள்ளது. இதுபற்றிய வீடியோக்களை, மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி புபேந்தர் யாதவ் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்தியா முழுவதும் 3,500 கி.மீ. தொலைவிலான ரெயில் தண்டவாள பகுதிகளை ஆய்வு செய்ததில், 110 வனவாழ் மண்டலங்கள் கண்டறியப்பட்டு உள்ளன. அவை விலங்குகள் அதிகம் பயன்படுத்தும் பகுதிகளாக அடையாளம் காணப்பட்டு உள்ளன. விலங்குகள் விபத்துகளில் சிக்காமல் தடுக்கும் நோக்கில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உள்ளது.