
90ஸ் கிட்ஸ்களின் நாயகனாக திகழ்பவர் நடிகர் ஜாக்கி சான். இவர் 'தி லெஜெண்ட் ஆப் டிரங்கன் மாஸ்டர், போலீஸ் ஸ்டோரி' உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானவர். அவரின் அசாத்திய சண்டை காட்சிகளுக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இவரின் 'எ லெஜென்ட்' படம் கடந்த ஆண்டு வெளியானது. இப்படம் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான 'தி மித்' படத்தின் தொடர்ச்சியாகும். இப்படம் குங்பூ யோகா படங்களின் தொடர்ச்சியாக உருவாகி இருக்கிறது. 'எ லெஜென்ட்' படம் தமிழில் 'விஜயபுரி வீரன்' என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியானது.
இவர் நடிப்பில் கடந்த 2010-ல் வெளியான 'கராத்தே கிட்' படத்திற்கு பல ரசிகர்கள் உள்ளனர். 359 மில்லியன் டாலர் வசூலை ஈட்டிய இப்படம், வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. அதனை இப்படத்தின் இரண்டாம் பாகமான 'கராத்தே கிட்: லெஜண்ட்ஸ்' என்ற படத்தில் ஜாக்கி சான் நடித்து முடித்துள்ளார். இப்படம் வருகிற மே மாதம் 30-ம் தேதி வெளியாகிறது.
ஜாக்கி சான் கடைசியாக கடந்த 2023ம் ஆண்டு வெளியான ரைட் ஆன் படத்தில் நடித்திருந்தார். இப்படம் ஜப்பானில் அதிக வசூல் செய்த சீனத் திரைப்படமாகவும், 2023-ல் மலேசியாவில் அதிக வசூல் செய்த சீன படங்களில் டாப் 3 இடத்தையும் பிடித்தது. தற்போது மீண்டும் ரைட் ஆன் படத்தை இயக்கிய லாரி யாங் இயக்கத்தில் ' தி ஷேடோஸ் எட்ஜ்' என்ற படத்தில் ஜாக்கி சான் நடித்திருக்கிறார். இப்படத்தின் ரிலீஸ் தேதி வரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
71 வயதைக் கடந்தாலும் இளமைத் துடிப்புடன் செயல்படும் ஹாங்காங் நாட்டைச் சேர்ந்த ஜாக்கி சானுக்கு சுவிட்ஸர்லாந்தில் ஆகஸ்ட் முதல் வாரம் நடைபெறவுள்ள 78-வது 'லோகார்னோ திரைப்பட விழாவில்' வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படவுள்ளது. அவர் ஆகஸ்ட் 9-ஆம் தேதி இந்த விருதைப் பெற்றுக் கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 1960களில் குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அடியெடுத்து வைத்த ஜாக்கி சானுக்கு சாதனைகள் புதிதல்ல என்றாலும், சர்வதேச அளவில் புகழ்பெற்ற 'லோகார்னோ திரைப்பட விழா' அரங்கில் விருது வழங்கப்பட உள்ளது பெருமையானதொரு மகுடமாகும்.
கடந்த ஆண்டு 77-வது லோகார்னோ திரைப்பட விழாவில் நடிகர் ஷாருக்கானுக்கு 'வாழ்நாள் சாதனையாளர் விருது' வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை பெற்ற முதல் இந்திய நடிகர் ஷாருக்கான்.