திருவண்ணாமலை,
பெஞ்சல் புயல் நேற்று இரவு கரையை கடந்திருந்தாலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கம், ஜவ்வாது மலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் செங்கம் குப்பநத்தம் அணை நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குப்பநத்தம் அணையின் முழு கொள்ளளவான 59 அடியில், தற்போதைய நிலவரப்படி 54 அடி வரை தண்ணீர் நிரம்பியுள்ளது.
இந்த நிலையில், அணையின் பாதுகாப்பு கருதி குப்பநத்தம் அணையில் இருந்து வினாடிக்கு 6,400 கனஅடி நீர் செய்யாற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் செய்யாற்றின் கரையோர பகுதிகளில் வசிக்கும் கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என பொதுப்பணித்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.