சென்னை: ஜவுளி ஆலைகளை நவீன தொழில்நுட்பம் மூலம் மேம்படுத்த அடுத்த 10 ஆண்டுகளுக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல், 15 ஆண்டுகள் பழமையான நூற்பாலை எந்திரங்களை மேம்படுத்துவதற்காக, கடனுக்கான 6 சதவீத வட்டி மானிய திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. தமிழ்நாட்டில் திருப்பூர், கோவை, சேலம் மற்றும் ஈரோடு போன்ற கொங்கு மண்டலங்களில் ஜவுளித்துறை சார்ந்த தொழில்கள் அதிகமாக செய்யப்பட்டு வருகின்றன.
அதன்படி, தமிழக சட்டபேரவையில், 2024-25ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கை கடந்த பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், அரசுத் துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு இருந்தன. கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், ‘‘நூற்பாலை தொழிலில் நவீன தொழில்நுட்பங்களை கொண்டு வருவதற்கான முதலீடு செய்ய வேண்டியது, தவிர்க்க முடியாததாக உள்ளது. அதன் மூலம் தேசிய அளவில் தமிழகம் முன்னிலை பெற வாய்ப்பு ஏற்படும்.
இந்த நோக்கத்தின் அடிப்படையில், நவீன தொழில்நுட்ப மேம்பாட்டிற்காக சிறப்புத் திட்டம் ஒன்றை அரசு அறிமுகம் செய்ய உள்ளது’’ என்று கூறப்பட்டு இருந்தது. அந்தவகையில், ஜவுளி ஆலைகளை நவீனமயமாக்க வட்டி மானியம் வழங்க முடிவு செய்துள்ளது. 6% வட்டியில் எளிதாக கடன் வழங்கும் திட்டத்தை 5 ஆண்டுகள் அடிப்படையில் வழங்க முடிவு செய்துள்ளனர். தமிழ்நாடு அரசின் கைத்தறி, கைவினை பொருட்கள், ஜவுளி மற்றும் காதி துறை, முதலீடு மற்றும் தொழில்நுட்பத்தை மேம்படுத்த விரும்பும் ஜவுளி ஆலைகளுக்கு 6% வட்டி மானியத் திட்டத்தை செயல்படுத்த, நடப்பு நிதியாண்டில் (2024-2025) ரூ.10 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது.
இத்திட்டத்தை 2024 முதல் 10 ஆண்டுகளுக்கு செயல்படுத்துவதற்காக துறை ரீதியாக ரூ.500 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது. ரிங் பிரேம் ஸ்பின்னர்களுக்கு 60 சதவீத நிதியும், மற்ற பணிகளுக்கு 25 சதவீத நிதியுதவியும் அளிக்கப்படும் என்று திட்டத்தின் செயல்பாட்டு வழிகாட்டுதல்கள் கூறுகின்றன. எண்ட் ஸ்பின்னிங் மற்றும் ஏர் ஜெட் அல்லது எலக்ட்ரோ ஸ்பின்னிங் யூனிட்டுகளுக்கு 15 சதவீத வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 6 சதவீத வட்டியில் 5 ஆண்டுகள் அடிப்படையில் கடன் வழங்கப்பட உள்ளன.
அதேபோல், தொழில் தொடங்குதல், அதற்கு இயந்திரங்கள் வாங்குதல் உள்ளிட்ட பல விஷயங்களுக்கு இந்த நிதி வழங்கப்படுகிறது. புதிய இயந்திரங்கள் வாங்குவது மட்டுமன்றி 15 ஆண்டுகளுக்கும் மேலான அனைத்து ஸ்பின்டில்கள் அல்லது ரோட்டர்களை நவீனப்படுத்தவும் இந்த நிதியை பயன்படுத்தலாம். அதற்கும் கடன் எடுக்கலாம். நூற்பாலை உற்பத்தியாளரிடமிருந்து நேரடியாக இயந்திரங்கள் மற்றும் உதிரிபாகங்களை வாங்குவதற்கும் இந்த கடனை பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி, இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 45 மில்லியன் ஸ்பின்டில்களில் 19 மில்லியன் ஸ்பின்டில்கள் தமிழ்நாட்டில் உள்ளன. இவை 7 முதல் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றப்பட வேண்டும். தமிழக அரசு வழங்கும் இந்த நிதி உதவி பெரிய அளவில் அரசுக்கு பலன் அளிக்கும் என்று கூறப்படுகிறது. இந்த திட்டம் காரணமாக கொங்கு மண்டலத்தில் உற்பத்தி 20 சதவீதம் வரை உயரும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இதனால் தொழில் துறையில் கொங்கு மண்டலம் புதிய உச்சத்தை அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தமிழகத்தில் ஜவுளி தொழிலில் சில நெருக்கடியை சந்தித்து வருவதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது மற்ற மாநிலங்களில் அங்குள்ள நூற்பாலைகளுக்கு வழங்கும் பெரிய அளவிலான சலுகைகள் இங்கு வழங்கப்படாததே என தெரிவிக்கப்படும் நிலையில், இந்த திட்டத்தின் மூலம் தமிழகத்தில் ஜவுளி தொழில் சிறந்து விளங்க வாய்ப்பு உருவாகும் என்று இத்தொழிலை சார்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
The post ஜவுளி ஆலைகளை நவீன தொழில்நுட்பம் மூலம் மேம்படுத்த அடுத்த 10 ஆண்டுகளுக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு: 6% வட்டி மானிய திட்டம் அறிமுகம், தமிழ்நாடு அரசு உத்தரவு appeared first on Dinakaran.