ஜம்மு காஷ்மீருக்கு விமான சேவை மீண்டும் தொடங்கியதும் தமிழ்நாட்டிற்கு வர மாணவர்கள் விருப்பம்: தமிழ்நாடு அரசு

7 hours ago 2

சென்னை: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தற்போது நிலவும் பதற்றமான சூழ்நிலையின் காரணமாக அங்கு வேளாண்மை, தோட்டக்கலை, மீன்வளம், பட்டுவளர்ப்பு, ஆடைவடிவமைப்பு (NIFT), தேசிய தொழில்நுட்ப கழகம் (NIT) உள்ளிட்ட உயர் கல்வி பயிலும் தமிழ்நாட்டை சேர்ந்த 52 மாணவ மாணவிகள் மற்றும் கல்வி சுற்றுலா சென்ற 4 மாணவர்களும் தமிழ்நாடு திரும்ப இயலாமல் இருப்பதாகவும், அவர்களை பாதுகாப்பாக தமிழ்நாடு அழைத்துவர கோரிக்கைகள் வரப்பெற்றுள்ளது.

ஏற்கனவே முதலமைச்சர் அவர்களின் உத்திரவின்படி, சுற்றுலா பயணிகளை மீட்க ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சென்று மீட்புப் பணிகளை ஒருங்கிணைந்த புதுக்கோட்டை மாவட்ட கூடுதல் ஆட்சியர் அப்தாப் ரசூல், இ.ஆ.ப., மற்றும் புது தில்லி தமிழ்நாடு இல்ல ஆணையர் ஆஷிஷ் குமார் இ.ஆ.ப., ஆகியோர் மாணவர்களுடன் தொடர்பு கொண்டு தொடர்ந்து பேசி வருவதுடன் மீட்கும் பணிகளையும் ஒருங்கிணைத்து வருகின்றனர்.

முதலமைச்சர் அவர்களின் உத்திரவின்படி, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் மாணவர்களுடன் தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு பாதுகாப்பாக இருக்குமாறும், தமிழ்நாடு அரசு சார்பில் தாங்கள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்படுவீர்கள் எனவும் தெரிவித்துள்ளார். அயலகத் தமிழர் நல வாரிய தலைவர் அவர்களும் மாணவர்களுடன் பேசியுள்ளார்.
பதற்றமான சூழ்நிலையின் காரணமாக ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கான விமான போக்குவரத்தும் தற்போது இரத்து செய்யப்பட்டுள்ளது. சாலை வழியாக அழைத்து வருவதற்கும் பாதுகாப்பற்ற நிலைமை உள்ளது. மாணவர்களும் சாலை வழியாக வருவதற்கு விருப்பம் இல்லை என தெரிவித்துள்ளனர். எனவே விமான சேவை மீண்டும் தொடங்கிய உடன் தமிழ்நாட்டிற்கு வருவதாக பெரும்பாண்மையான மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

அரசால் நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. நிலைமை சீரடைந்து பாதுகாப்பான சூழல் உருவான உடன் மாணவர்கள் தமிழ்நாட்டிற்கு அழைத்து வரப்படுவார்கள். கல்வி சுற்றுலா சென்ற நான்கு மாணவர்கள் மட்டும் சாலை வழியாக புது தில்லிக்கு புறப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று (09.05.25) இரவு 07.30 மணியளவில் புது தில்லி தமிழ்நாடு இல்லம் வந்து சேர்வார்கள். பின்னர் 10.05.25 அன்று அதிகாலை விமானம் மூலம் தமிழ்நாடு அழைத்து வரப்படுவர். இந்தியாவின் மேற்கு எல்லைப்பகுதிகளில் உள்ள தமிழர்களுக்கு தேவையான தகவல்கள், உதவி, மீட்பு மற்றும் தமிழகத்திற்கு அழைத்து வருவதற்கு தேவையான பணிகளை மேற்கொள்ள புது தில்லி தமிழ்நாடு இல்லத்தில் 24/7 உதவி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

புது தில்லி தமிழ்நாடு இல்ல உதவி எண்கள்
011-24193300 (land line),
9289516712 (Mobile Number with Whatsapp)

மேலும், பாதிக்கப்பட்ட தமிழர்களின் குடும்ப உறுப்பினர்கள், தங்களுக்கு உதவி தேவைப்படும் நிலையில், தமிழ்நாடு அரசின் 24/7 உதவி எண்களை தொடர்புகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இந்தியாவிற்குள் – 1800 309 3793
வெளிநாடு +91 80 6900 9900
தொடர்புக்கு + 91 80 6900 9901

The post ஜம்மு காஷ்மீருக்கு விமான சேவை மீண்டும் தொடங்கியதும் தமிழ்நாட்டிற்கு வர மாணவர்கள் விருப்பம்: தமிழ்நாடு அரசு appeared first on Dinakaran.

Read Entire Article