ஸ்ரீநகர்,
ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் சுற்றுலா வரவேற்பு மையம் அருகே உள்ள மார்க்கெட் நேற்று வழக்கம் போல் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது. விடுமுறை நாள் என்பதால் மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. மக்களின் பாதுகாப்புக்காக ராணுவ வீரர்கள் சந்தைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பயங்கரவாதி ஒருவர் ராணுவ வீரர்களை நோக்கி கையெறி குண்டு ஒன்றை வீசினார்.ஆனால் எதிர்பாராத விதமாக அந்த குண்டு பாதி வழியிலேயே சாலையில் விழுந்தது. அந்த குண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.இதனால் அங்கு பெரும் பதற்றமும், பீதியும் உருவானது. சந்தையில் இருந்த மக்கள் அலறியடித்தபடி அங்கும், இங்குமாக ஓட்டம் பிடித்தனர். எனினும் இந்த குண்டு வீச்சில் 2 பெண்கள் உள்பட 11 பேர் படுகாயம் அடைந்தனர்.
குண்டுவீச்சு சம்பவத்தை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டனர். அவர்கள் படுகாயம் அடைந்த நபர்களை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.இந்த நிலையில் பயங்கரவாதிகளின் இந்த தாக்குதலுக்கு காஷ்மீர் முதல்-மந்திரி உமர் அப்துல்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "ஸ்ரீநகரில் உள்ள சந்தையில் அப்பாவி மக்கள் மீது கையெறி குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது மிகுந்த கவலை அளிக்கிறது. அப்பாவி பொதுமக்களை குறிவைப்பதை நியாயப்படுத்த முடியாது. இந்த தாக்குதல்களின் வேகத்தை விரைவில் முடிவுக்கு கொண்டுவர ராணுவம் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும், இதனால் மக்கள் எந்த அச்சமும் இல்லாமல் தங்கள் வாழ்க்கையை நடத்த முடியும்" என தெரிவித்துள்ளார்.