ஜமைக்காவில் நெல்லை வாலிபர் கொள்ளையரால் சுட்டுக்கொலை: உடலை மீட்டு தரக்கோரி கலெக்டர் ஆபீசில் மனு

4 weeks ago 4

நெல்லை: ஜமைக்கா நாட்டில் சூப்பர் மார்க்கெட்டில் புகுந்து கொள்ளையர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நெல்லை வாலிபர் இறந்துள்ளார். அவரது உடலை சொந்த ஊருக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் உறவினர்கள் மனு அளித்தனர். மத்திய அமெரிக்காவின் கரீபியன் கடல் பகுதியில் அமைந்துள்ள ஜமைக்கா நாட்டில் நெல்லை மாவட்டம், சுரண்டையைச் சேர்ந்த சுபாஷ் அமிர்தராஜ் என்பவர் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார்.

இந்த சூப்பர் மார்க்கெட்டில் நெல்லை சந்திப்பு, மீனாட்சிபுரம், புளியந்தோப்பை சேர்ந்த நாகராஜன் மகன் விக்னேஷ் (31) ஓராண்டுக்கு மேலாக சூபர்வைசராக வேலை செய்து வந்தார். அவருடன் நெல்லையைச் சேர்ந்த மேலும் 3 பேர் வேலை செய்தனர். இந்நிலையில் பட்டப்பகலில் அந்த சூப்பர் மார்க்கெட்டில் புகுந்த கொள்ளையர்கள் பணத்தை திருடி விட்டு அங்கிருந்து தப்பிக்க துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் குண்டு பாய்ந்து விக்னேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் 2 பேர் காயமடைந்தனர்.

இச்சம்பவம் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை 1.30 மணியளவில் நடந்ததாக தெரிகிறது. தற்போது விக்னேஷ் உடல் ஜமைக்கா நாட்டு அதிகாரிகள் வசம் இருப்பதாகவும், சட்ட நடவடிக்கைகள் நிறைவு பெற்று உடல் நெல்லை வந்து சேர 10 நாட்களுக்கு மேல் ஆகும் எனவும் தகவல் தரப்பட்டுள்ளது. இதையடுத்து விக்னேஷின் உறவினர்கள் நேற்று காலை நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் பாளையங்கோட்டை எம்எல்ஏ அப்துல் வஹாப், மேயர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் முன்னிலையில் மனு அளித்தனர். அதில், விக்னேஷின் உடலை விரைந்து கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

The post ஜமைக்காவில் நெல்லை வாலிபர் கொள்ளையரால் சுட்டுக்கொலை: உடலை மீட்டு தரக்கோரி கலெக்டர் ஆபீசில் மனு appeared first on Dinakaran.

Read Entire Article