கொல்கத்தா: ஜப்பானில் ரென்கோஜியில் உள்ள புத்த கோயிலில் வைக்கப்பட்டு இருக்கும் நேதாஜியின் அஸ்தியை இந்தியா கொண்டு வர வேண்டும் என்று அவரது உறவினர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். நேதாஜியின் 128வது பிறந்தநாளையொட்டி செய்தியாளர்களை சந்தித்த நேதாஜியின் பேரன் சந்திரகுமார் போஸ் கூறுகையில், ‘‘நேதாஜியின் மகள் அனிதா போஸ் மற்றும் நேதாஜி குடும்ப உறுப்பினர்கள் வெளிநாட்டில் இருக்கும் நேதாஜியின் அஸ்தியை இந்தியாவிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனுப்பிய ஏராளமான கடிதங்களுக்கு பிரதமர் அலுவலகமும் இந்திய அரசும் பதிலளிக்க வேண்டும். நேதாஜி சுதந்திர இந்தியாவிற்கு திரும்ப விரும்பினார். ஆனால் இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராடி தனது உயிரை தியாகம் செய்ததால் அவரால் இந்தியா திரும்ப முடியவில்லை. அவரது அஸ்தி தொடர்ந்து ஜப்பானில் இருப்பது புனிதத்தை அவமதிக்கும் செயலாகும். 10 விசாரணை அறிக்கைகளில் நேதாஜியின் அஸ்தி இருப்பதற்கான உறுதியான ஆதாரங்கள் உள்ளது. எனினும் அஸ்தி நேதாஜியுடையது இல்லை என்று அரசு கருதினால் அதற்கான அறிக்கை வெளியிடவேண்டும். அரசின் மவுனம் மறைந்த சுதந்திர போராட்ட தலைவரின் நினைவை அவமதிப்பதாகும்” என்றார்.
The post ஜப்பானில் இருக்கும் நேதாஜி அஸ்தியை இந்தியாவிற்கு கொண்டுவர வேண்டும்: உறவினர்கள் மீண்டும் வலியுறுத்தல் appeared first on Dinakaran.