சென்னை,
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை அண்மையில் தொடங்கினார். இதையடுத்து தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் கடந்த மாதம் (அக்டோபர்) 27-ந்தேதி பிரமாண்டமாக நடந்தது. இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர். மாநாட்டில் விஜய்யின் பரபரப்பான பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
மாநாட்டை தொடர்ந்து 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழக வெற்றிக்கழகம் தயாராகி வருகிறது. அதற்கேற்ப அரசியல் வியூகங்களை விஜய் அமைத்து வருகிறார். மற்றொரு பக்கம் தமிழக வெற்றிக்கழகத்தை அனைத்து நிலைகளிலும் பலப்படுத்தும் பணியையும் அவர் தொடங்கி உள்ளார். மேலும் தமிழகம் முழுவதும் கட்சிக்கு புதிய நிர்வாகிகளை நியமிக்க விஜய் திட்டமிட்டு வருகிறார்.
இந்த நிலையில், அடுத்த ஆண்டு ஜனவர் முதல் வாரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. தவெகவில் 100 மாவட்டங்களாக பிரித்து மாவட்ட செயலாளர்களை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவகத்தில் ஒன்றிய, பகுதி,பேரூர், கிளை கழக நிர்வாகிகள், அணி தலைவர்களிடம் கருத்து கேட்டு செயலாளர்களை தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பெரும்பாலான நிர்வாகிகள் மாவட்ட செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்துடன் மாவட்ட அமைப்பாளர்கள், பொருளாளர்கள், பொறுப்பாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் தேர்வும் நடைபெற்று வருகிறது. மாவட்ட செயலாளர்கள் தேர்வு செய்யப்படுவதை கட்சி தலைவர் விஜய் இறுதி செய்ததும், பட்டியல் வெளியாகும் என கூறப்படுகிறது.
மாவட்ட, வட்ட, ஒன்றிய, கிளை வரை செயலாளர்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள். தேர்தல் பணிக்காக இப்போதே ஒரு வாக்குச்சாவடிக்கு 10 பொறுப்பாளர்கள் வீதம் நியமித்து பணிகளை தொடங்கவும் விஜய் திட்டமிட்டு இருக்கிறார். நிர்வாகிகள் நியமிக்கப்பட்ட பிறகு மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் செய்ய விஜய் திட்டமிட்டு உள்ளார். இதற்கான பயண விவர தயாரிப்பு பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.