சென்னை,
கேரளாவின் வைக்கத்தில் பெரியார் நினைவிடம் மற்றும் நூலகத்தை திறந்துவைத்த நிகழ்வில் பங்கேற்றது குறித்து திமுக தொண்டர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் தெரிவித்து இருப்பதாவது;
"நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் மடல்.
எந்தத் தெருவில் நடப்பதற்குச் சாதிப்பாகுபாடு தடையாக இருந்ததோ, அந்தத் தெருவில் சாரை சாரையாக மக்கள் நடந்து செல்கிறார்கள். அதில் சாதிப் பாகுபாடு இல்லை. எந்தத் தலைவர் இந்த உரிமைக்காகப் பாடுபட்டு நிறைவேற்றிக் காட்டினாரோ அந்தத் தலைவருக்கான நினைவிடம் புதுப்பொலிவுடன் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. கேரள மாநிலம் வைக்கம் நகரில் இதனை நேரில் காணும் வாய்ப்பினைப் பெற்றபோது, 'எல்லாருக்கும் எல்லாம்' என்கிற திராவிட மாடலின் விதை நூறாண்டுகளுக்கு முன்பு ஊன்றப்பட்டு, வெற்றிக்கனி தரும் மரமாக, சமத்துவ நிழல் தரும் தருவாக வளர்ந்திருப்பதை நான் மட்டுமல்ல, நாட்டு மக்கள் அனைவருமே உணர முடிந்தது.
அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் (இன்றைய கேரளத்தில்) உள்ள வைக்கத்தில் அமைந்துள்ள மகாதேவர்கோயிலை சுற்றியுள்ள தெருக்களில் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினர் நடப்பதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. பிறப்பால் மனிதர்களிடம் பேதம் வளர்க்கும் இந்தச் சாதிக் கொடுமைக்கு எதிராகத் திருவிதாங்கூர் பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் இயக்கத்தினர், சமூகநீதிச் செயற்பாட்டாளர்கள் 1924-ஆம் ஆண்டில் போராட்டம் நடத்திக் கைதான நிலையில், போராட்டத்தை வழிநடத்த தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த பெரியாரை அழைக்கிறார்கள். ஈரோட்டிலிருந்து வைக்கம் சென்றார் பெரியார். கோயிலைச் சுற்றியுள்ள சாலைகளிலெல்லாம் அனைத்து மக்களும் நடப்பதற்கான உரிமைப் போராட்டத்தைத் தொடர்ந்தார். சிறைப்பட்டார். அஞ்சவில்லை. அவருக்கு எதிராக யாகம் நடத்தப்பட்டது. அவர் கலங்கவுமில்லை. யாகங்கள் அவரது போராட்ட உணர்வை முடக்கிவிடவுமில்லை.
தனக்கு எவ்வித நேரடித் தொடர்பும் இல்லாத ஓர் ஊரில் ஒடுக்குமுறைக்குள்ளான மக்களின் உரிமைக்காகக் களம் கண்ட பெரியாரின் போராட்ட உணர்வுதான் சுயமரியாதை இயக்கத்திற்கு விதையானது. அது திராவிடர் கழகமாக உருவெடுத்து, பெரியாரிடம் பயின்ற அண்ணாவால் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் இயக்கம் தொடங்கப்பட்டு, மக்கள் ஆதரவுடன் ஆட்சியைப் பிடித்தது.
இவற்றுக்கெல்லாம் தொடக்கப்புள்ளியாக, இந்திய அளவில் கவனத்தை ஈர்க்கக்கூடியதாக அமைந்த வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டில், கேரளாவின் வைக்கம் நகரில் தந்தை பெரியாரின் நினைவிடம் 8 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு அரசால் புதுப்பிக்கப்பட்டது. இந்தப் பணிகளை நிறைவேற்றுவதற்கு, சமூகநீதி - சமத்துவக் கொள்கை உணர்வு கொண்ட மூத்த சகோதரராக துணைநின்ற கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் முழு ஒத்துழைப்பினை வழங்கினார்.
ஒரு போராட்டக் களத்தின் வெற்றிக்கான நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்திற்கு பொதுவுடைமை இயக்கத்தைச் சேர்ந்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையேற்றது மிகப் பொருத்தமாக அமைந்தது. தந்தை பெரியார் நினைவிடத்தை உங்களில் ஒருவனான நான் திறந்து வைப்பதாகத் திட்டமிடப்பட்டிருந்தாலும், மலையாள மண்ணின் மைந்தரான தோழர் பினராயி விஜயனுடன் இணைந்தே ரிப்பன் வெட்டி திறந்து வைத்தேன்.
மக்களைப் பிளவுடுபத்தி, மாநிலங்களைச்சிறுமைப்படுத்தி ஆளத் துடிப்பவர்களுக்குப் பெரியார் என்றாலும், சமத்துவம் என்றாலும், சமூகநீதி என்றாலும் இவையனைத்தையும் ஒன்றாக்கிய திராவிட மாடல் என்றாலும் எரிச்சல் ஏற்படுகிறது, வன்மம் வெளிப்படுகிறது. வைக்கத்தில் நூற்றாண்டு விழா நடத்தப்பட்ட அதே நாளில், ஒரே நாடு, ஒரே தேர்தல் எனும் ஜனநாயக விரோதத் திட்டத்திற்கு ஒன்றிய பா.ஜ.க. அமைச்சரவை ஒப்புதல் அளித்துக் கொடுங்கோன்மைக்கு வழி வகுக்க நினைக்கிறது.
நடைமுறைச் சாத்தியமில்லாத - மக்களாட்சி முறைக்கு விரோதமான - கூட்டாட்சித் தத்துவத்தைக் குற்றுயிராக்கும் ஒரே நாடு - ஒரே தேர்தல் முறைக்கு எதிராகத் தமிழ்நாடு சட்டமன்றத்தில் 14-2-2024 அன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வைக்கம் விழாவில் பேசிய கேரள மாநில முதலமைச்சர் தோழர் பினராயி விஜயனும், மாநிலங்களின் சுயமரியாதைக்காக நாம் எழுந்து நிற்க வேண்டும் என்பதை வலியுறுத்தியிருக்கிறார். சுயமரியாதை இயக்கம் கண்டு அதன் வழியாகத் திராவிட இனத்தின் சுயமரியாதையை மீட்ட தந்தை பெரியாரின் வழியில், மாநிலங்களின் சுயமரியாதையை மீட்க ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டிய தருணம் இது.
நூறாண்டுகள் கடந்தாலும் நமக்கான போராட்டங்கள் தொடர்கின்றன. தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் போராடுவோம்! அவர்களைப் போலவே வெற்றி காண்போம்!"
இவ்வாறு அந்த கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.