![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/09/38418947-4.webp)
சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய்யின் 69-வது படத்தை பிரபல இயக்குனர் எச்.வினோத் இயக்குகிறார். இந்த படத்திற்கு 'ஜன நாயகன்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் பிரகாஷ் ராஜ், பிரியாமணி, கவுதம் வாசுதேவ் மேனன், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, நரேன் ஆகியோர் நடிக்கின்றனர்.
கே.வி.என் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சத்யன் சூர்யன் இப்படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இது விஜய் நடிக்கும் கடைசி படமாகும். குடியரசு தினத்தை முன்னிட்டு இப்படத்தின் பர்ஸ்ட் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி வைரலாகின. கடந்த சில மாதங்களுக்கு முன்னரே இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த படமானது அரசியல் தொடர்பான கிரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் ஜன நாயகன் படத்தில் பிரபல நடிகையான ஸ்ருதி ஹாசன் இணைந்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. இவர் ஏற்கனவே 'புலி' படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது. இனிவரும் நாட்களில் ஸ்ருதிஹாசனின் கதாபாத்திரம் குறித்து அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/09/38418996-4a.webp)