புழல்: சோழவரம் அருகே நேற்று மாலை மீஞ்சூருக்கு சென்று கொண்டிருந்த சரக்கு லாரி, சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தின்மீது வேகமாக மோதியது. இதில் அந்த மின்கம்பம் சேதமாகி, அப்பகுதியில் சுமார் 3 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது. இதில் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். சோழவரத்தில் இருந்து பூதூர் வழியாக நேற்று மாலை மீஞ்சூர் நோக்கி ஒரு சரக்கு லாரி சென்று கொண்டிருந்தது. இந்த லாரி திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. இதில் பூதூர், அம்பேத்கர் சிலை அருகே சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தின்மீது லாரி வேகமாக மோதியது. இதனால் அந்த மின்கம்பம் சாலையின் குறுக்கே விழுந்தது. மேலும், அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதையடுத்து சரக்கு லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு டிரைவர் தப்பியோடி விட்டார்.
இதுகுறித்து தகவலறிந்ததும் சோழவரம் போலீசார் விரைந்து வந்தனர். அங்கு விபத்தை ஏற்படுத்திய லாரியை பறிமுதல் செய்து, தப்பியோடிய லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும், லாரி மோதி மின்கம்பம் உடைந்து விழுந்த தகவலறிந்ததும் சோழவரம் மின்வாரிய அதிகாரிகளும் ஊழியர்களும் விரைந்து வந்தனர். பின்னர் அந்த மின்கம்பத்தை முழுமையாக சீரமைத்து, அப்பகுதியில் மீண்டும் மின் இணைப்பு வழங்கினர். இவ்விபத்தினால் அப்பகுதியில் சுமார் 3 மணி நேர மின்தடையால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.
The post சோழவரம் அருகே லாரி மோதி மின்கம்பம் சேதம்: 3 மணி நேரம் மின்தடை appeared first on Dinakaran.