சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் மலைக் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது: ரோப் கார் நிலையத்தில் 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

12 hours ago 1

சோளிங்கர்: விடுமுறையையொட்டி, சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் மலைக்கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் லட்சுமி நரசிம்மர் கோயில் 1305 படிகள் கொண்ட மலை மீது அமைந்துள்ளது. இங்கு தரிசனம் செய்ய தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். பொதுவாக வெள்ளி. சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.

இக்கோயிலில் பக்தர்களின் வசதிக்காக ரோப்கார் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரோப்கார் தினமும் காலை 8.30 மணி முதல் மாலை 5 மணி வரை இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று (கிரிஸ்துமஸ்) அரசு விடுமுறை என்பதால் நரசிம்மர் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் மலை அடிவாரத்தில் இருந்து ரோப்காரில் மலைக்கோவிலுக்கு செல்வதற்காக அதிகாலை முதலே ரோப் கார் நிலையத்தில் ஏராளமானோர் குவிந்தனர். இதனால் ரோப் கார் நிலையத்தில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.

இதன் காரணமாக பக்தர்கள் சுமார் 4 மணி நேரம் காத்திருந்து ரோப்காரில் மலை கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் ஒரு நாளைக்கு ஆயிரம் பக்தர்கள் மட்டுமே ரோப் காரில் செல்ல முடியும் என்பதால் ரோப் கார் நிலையத்தில் பல மணி நேரம் காத்திருந்தும் ரோப் காரில் செல்ல டிக்கெட் கிடைக்காத பக்தர்கள் படிகள் வழியாக மலைக்குச் சென்று சுவாமியை தரிசனம் செய்தனர். படிகள் வழியாக சென்ற பக்தர்கள் 1 மணி நேரத்தில் சுவாமி தரிசனம் செய்தனர்.

The post சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் மலைக் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது: ரோப் கார் நிலையத்தில் 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம் appeared first on Dinakaran.

Read Entire Article