ஈரோடு: ஈரோடு, கரூர் ரோட்டில் உள்ள சோலாரில் கட்டப்பட்டு வரும் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணிகளை எதிர் வரும் மே 31ம் தேதிக்குள் நிறைவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது ஈரோடு நகரில், மேட்டூர், சத்தி ரோடுகளின் சந்திப்பு பகுதியில் செயல்பட்டு வரும் பேருந்து நிலையத்தில் இருந்து சத்தியமங்கலம், கோபி, பவானி, அந்தியூர், மேட்டூர், பெருந்துறை, திருப்பூர், கோவை, கரூர், திருச்சி, தாராபுரம், பழனி, திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் சங்ககிரி, திருச்செங்கோடு, சேலம், சென்னை, பெங்களூரு வழித்தட மார்க்கத்தில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
தவிர இதே பேருந்து நிலைய வளாகத்தில் இருந்து, நகரப் பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால், ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் நோக்கில் பயணிகள் வசதிக்காக ஈரோடு, கரூர் ரோட்டில் உள்ள சோலார் பகுதியில் ரூ. 63.5 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய பேருந்து நிலையம் அமைக்க கடந்த 20212022ம் ஆண்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டு, கடந்த 2022 ஆகஸ்ட் 18ம் தேதி பணியாணை வழங்கப்பட்டு, கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டன. தற்போது சுமார் 90% பணிகள் முடிக்கப்பட்டு விட்டன.
இந்நிலையில், அதுகுறித்து, தொகுதி எம்.எல்.ஏ.வும், மாவட்ட அமைச்சருமான சு.முத்துசாமி கடந்த சில நாள்களுக்கு முன்னர் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளார். அப்போது, சோலார் பேருந்து நிலையத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவது குறித்து ஆலோசித்துள்ளார்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘‘சோலார் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணி 90% நிறைவடைந்துள்ளது. இதற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் 89% வரை தற்போது செலவிடப்பட்டுள்ளது. பேருந்து நிலையத்தில், பேருந்துகள், ஆட்டோக்கள் நிறுத்துமிடம் குறித்து இறுதி செய்ய வேண்டியுள்ளது. வாகனங்கள் வந்து செல்லும் வழிகள் இறுதி செய்யப்படவேண்டும்.
மேலும், பேருந்து நிலைய வளாகத்தில் கடைகள் வைப்பதற்கான டெண்டர்களும் இறுதி செய்யப்பட்டுள்ளன. மின் விளக்குகள், கழிப்பறைகள், வாகன நிறுத்துமிடம் போன்ற பணிகளை இறுதி செய்ய வேண்டியுள்ளது. அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவற்றை 100% முடித்து, எதிர்வரும் மே 31ம் தேதிக்குள் பேருந்து நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு முடிவு செய்துள்ளோம்.
அதேபோல, சத்தி ரோட்டில், கனிராவுத்தர் குளம் அருகில் ஒரு பேருந்து நிலையம் அமைக்க, நிலம் கையகப்படுத்துதல் மற்றும் கட்டுமான பணிக்கு கடந்த 2024 ஜனவரி 4ம் தேதி நடைபெற்ற 20வது மாநில உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு நிதி கூட்டத்தில் ரூ. 138.44 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, கனிராவுத்தர் குளம் பகுதியில் பேருந்து நிலையத்துக்கு நிலம் கையகப்படுத்துவது குறித்து மாவட்ட அளவில், நேரடி பேச்சுவார்த்தை குழு பணியை மேற்கொண்டுள்ளது” என்றனர்.
The post சோலார் புதிய பஸ் ஸ்டாண்ட் பணிகளை மே 31ம் தேதிக்குள் நிறைவு செய்ய முடிவு: அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.