சென்னை,
'நானும் ரவுடிதான், எல்.கே.ஜி, மூக்குத்தி அம்மன், ரன் பேபி ரன், புகழ்' போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி. நகைச்சுவையில் தனக்கென்று தனி இடத்தை ரசிகர்கள் மனதில் பிடித்துள்ளார். ஆனால் தற்போது நகைச்சுவையை மொத்தமாக தவிர்த்து, வித்தியாசமான கதாபாத்திரத்தில் 'சொர்க்கவாசல்' படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தை பா. ரஞ்சித்தின் உதவி இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கியுள்ளார். ஸ்வீப் ரைட் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தின் கதையை இயக்குனர் உடன் தமிழ்ப் பிரபா, அஸ்வின் ரவிச்சந்திரன் இணைந்து எழுதியுள்ளார்கள். மத்திய சிறைச்சாலையை மையமாக வைத்து 1999-ல் நடக்கும் கதையாக இப்படம் உருவாகியுள்ளது. இதில், செல்வராகவன், கருணாஸ், பாலாஜி சக்திவேல், எழுத்தாளர் சோஷா சக்தி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இப்படம் கடந்த மாதம் 29-ந் தேதி வெளியானது. இந்த படத்தின் முதல் பாதி உணர்வுப்பூர்வமாக நகர்ந்த நிலையில் இரண்டாம் பாதியில் ரத்தம் தெளிக்கும் வன்முறை காட்சிகள் இடம்பெற்று இருந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இந்த நிலையில் தற்போது இப்படத்திலிருந்து 'காலம் தன்னாலே' என்ற வீடியோ பாடல் வெளியாகி உள்ளது. இப்படம் இதுவரைக்கும் ரூ.10 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.