சொன்னது பலிக்குமாம்… திடீர் ஜோசியரான எடப்பாடி

3 weeks ago 5

இடைப்பாடி: சேலம் மாவட்டம், இடைப்பாடி ஒன்றிய அதிமுக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம், சித்தூரில் நேற்று நடந்தது. கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசியதாவது: அடிப்படை கட்டமைப்பு உள்ள கட்சி அதிமுக மட்டும் தான். ஜெயலலிதா இருந்த போது 40 லட்சம் இளைஞர்கள் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டனர். தற்போது, அதே போல் இளைஞர்களை சேர்க்க வேண்டும். தேர்தல் நேரத்தில் இளைஞர்கள் துடிப்பாக செயல்படுகிறார்கள்.

2019ல் ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்ற அதிமுக கூட்டணி, அடுத்து 2021ல் சட்டமன்றத் தேர்தலில் 75 இடங்களில் வெற்றி பெற்றது. கடந்த சட்டமன்றத் தேர்தலை விட, நாடாளுமன்றத்தேர்தலில் அதிமுக ஒரு சதவீதம் கூடுதலான வாக்குகளை பெற்றுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில், அதிமுக வாக்கு சதவீதம் 19.35 ஆக இருந்தது. 2024 நாடாளுமன்ற தேர்தலில் ஒரு சதவீதம் அதிகரித்து 20.35 சதவீதம் ஆக உள்ளது.

என்னை ஜோசியர் என்று முதலமைச்சர் விமர்சிக்கிறார். என்னுடைய ஜோசியம் நிச்சயம் பலிக்கும். 2026ல் அதிமுக நிச்சயம் ஆட்சிக்கு வரும். 2026ல் அதிமுக தலைமையில் பலமான, அற்புதமான கூட்டணி அமையும். தமிழக மக்கள் நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல் என்று பிரித்துப்பார்த்து தான் வாக்களிப்பார்கள். மக்கள் விரும்பும் வகையில், வெற்றி கூட்டணியை அதிமுக உருவாக்கும். வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மாபெரும் வெற்றி பெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

* எடப்பாடியை குறை கூற டிடிவிக்கு தகுதி இல்லை: திண்டுக்கல் சீனிவாசன்
அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் மதுரையில் நேற்று நிருபர்களிடம் கூருகையில், ‘அனைவரும் தனித்து நின்றால், அதிமுகவும் தனித்து நிற்க தயார். தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் உள்ளன. அதனால், இப்போது எதையும் சொல்ல முடியாது. எடப்பாடியை குறை சொல்ல டிடிவிக்கு எந்த தகுதியும் இல்லை. ஒன்றிய அரசு ரெய்டு நடத்தி வருகிறது. அதை நாங்களும் பார்த்து வருகிறோம். வைத்திலிங்கத்தை நாங்களா இழுக்கிறோம். அவர்களாக ஏதோ செய்கிறார்கள். செய்யட்டும். சோதனைக்கு பின் பார்க்கலாம்’’ என்றார்.

* சிரஞ்சீவியும் மாநாடு நடத்துனாரு… விஜயும் நடத்துகிறார்…பார்க்கலாம்… கே.பி.முனுசாமி
அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி கூறுகையில், ‘பல்வேறு பொறுப்புகளை வழங்கிய ஜெயலலிதாவிற்கே துரோகம் செய்ததால், கட்சியில் இருந்து நீக்கியது மட்டுமல்லாமல், என் கண் முன்னால் வரக்கூடாது என துரத்தி அடிக்கப்பட்டவர் தினகரன். அவருக்கு பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை. தந்தை பெரியாரை முன்னிறுத்திநடிகர் விஜய் கட்சி துவங்குகிறார். அதற்கு வாழ்த்துக்கள்.

தமிழகத்தில் யார் அரசியலில் ஈடுபட்டாலும் திராவிட இயக்கத்தின் மூளை, கரு, தந்தை பெரியாரை பயன்படுத்தாமல் அரசியல் நடத்த முடியாது என்பது நிரூபணம் ஆகியுள்ளது. மாநாடு நடத்தும் விஜய்க்கு வாழ்த்துக்கள். ஆந்திராவில் நடிகர் சிரஞ்சீவி கூட அனைவரும் வியக்கும் வகையில் மாநாடு நடத்தினார். பிரமாண்டமாக, டெக்னிக்கலாக மாநாடு நடத்தினார். மகிழ்ச்சியாக இருந்தது. விஜயும் தற்போது நடத்துகிறார், பார்க்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

The post சொன்னது பலிக்குமாம்… திடீர் ஜோசியரான எடப்பாடி appeared first on Dinakaran.

Read Entire Article