பெங்களூரு: ஜெயலலிதாவுக்கு சொந்தமான தங்கம், வைர நகைகளை தங்களிடம் ஒப்படைக்கவேண்டும் என்று தீபா தொடர்ந்த வழக்கு விசாரணை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜனவரி 3ல் நடைபெறுகிறது. சொத்து குவிப்பு வழக்கில் தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்து கைப்பற்றப்பட்ட நகைகள் கர்நாடக அரசின் கருவூலத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி எச்.ஏ. மோகன் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் கைப்பற்றப்பட்ட தங்கம், வைரம் மற்றும் வெள்ளி பொருட்களை ஏலம் விடுவதற்காக கர்நாடக அரசு தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இதற்கிடையே ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, ஜெயலிதாவுக்கு சொந்தமான நகைகளை ஏலத்தில் விடக்கூடாது.
அதை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவிற்கு தடை வாங்கினார். இதனால், ஜெயலலிதாவுக்கு சொந்தமான நகைகள் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்படவில்லை. இது போன்ற சூழ்நிலையில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில், நீதிபதி சிவசங்கர அமரனவர் முன்னிலையில் ஜெயலலிதாவின் நகைகளை தங்களிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என்று தீபாவின் சார்பில் அவரது வக்கீல் சத்யகுமார் நேற்று ஆஜராகி வாதாடினார். அப்போது அரசு சார்பில் ஆஜரான கிரண் ஜவளி தமிழக அரசின் சார்பில் வழக்கில் சிறப்பு வழக்கறிஞர் சந்தேஷ் சவுட்டா நியமிக்கப்பட்டுள்ளார் என்கிற தகவலை நீதிமன்றத்தில் தெரிவித்தார். தமிழக அரசின் சார்பில் தாக்கல் செய்த ஆவணங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதி சிவசங்கர அமரனவர் ஜனவரி 3ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டார். எனவே, ஜெயலலிதாவுக்கு சொந்தமான தங்கம், வைர நகைகள் ஏலத்தில் விடுவதற்கு தடை நீடிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
The post சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் நகைகள் யாருக்கு? கர்நாடகா உயர்நீதிமன்றம் ஜனவரி 3ல் விசாரணை; தீபா தொடர்ந்த வழக்கில் நீதிபதி உத்தரவு appeared first on Dinakaran.