சொத்து வரி வசூல் என்ற பெயரில் மாநகராட்சியிலிருந்து பேசுவதாக கூறி மக்களை ஏமாற்றி பணம் பறிக்க முயற்சி: மோசடி கும்பலை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை

3 months ago 12


சென்னை: சொத்து வரி பாக்கி இருப்பதாக கூறி, மாநகராட்சி ஊழியரை போல பேசி பணம் பறிக்க முயற்சிக்கும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என சென்னை வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னையில் பல்வேறு உள்கட்டமைப்புகளையும், புதிதாக சேர்க்கப்பட்ட மாநகராட்சி பகுதிகளில் குடிநீர், கழிவுநீர் இணைப்பு வசதிகளும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. எனவே, வரி செலுத்த வேண்டியது மக்களின் முக்கிய கடமையும் கூட. பலரும் வரி பாக்கி செலுத்தாமல் இருப்பதால், மாநகராட்சியில் இருந்து நினைவூட்டல் அழைப்புகளும் சொத்து உரிமையாளர்களுக்கு வருகின்றன. இவை பெரும்பாலும் மாநகராட்சியின் லேண்ட் லைன் எண்ணில் இருந்துதான் வரும். இது ஒருபுறம் இருக்க, இத்தகைய அழைப்புகள் சமீப காலமாக தெரியாத மொபைல் எண்களில் இருந்தும் வருகின்றன. ‘‘சார், சென்னை மாநகராட்சி மண்டல ஆபீஸ்ல இருந்து பேசுறோம்.

வரி பாக்கி இருக்கு கட்டணும்’’ என சென்னையில் உள்ள பல மக்களுக்கு போன் வருகிறது. மாநகராட்சியில் வரி பாக்கியை நினைவூட்ட வரும் போன் என சிலர் கருதுகின்றனர். இதனால், போனில் வந்தவர் கேள்விகளுக்கு சிரத்தையாக பதிலளிக்கின்றனர். காரணம், மாநகராட்சியில் இருந்து பேசுவதாக கூறுபவர், ‘‘உங்கள் பெயர் இதுதானே? இந்த முகவரியில் உள்ள வீட்டில் தானே இருக்கிறீர்கள்?’’ என வீட்டு உரிமையாளரின் அனைத்து விவரங்களையும் கூறுவதால் மாநகராட்சி ஊழியர் தான் பேசுகிறார் என நம்பி விடுகின்றனர். ஆனால், வரி தொகை தொடர்பாக அவர்கள் தெரிவிக்கும் விவரங்கள், இத்தகைய போன் அழைப்புகள் மாநகராட்சியில் இருந்துதான் வருகிறதா? போனில் பேசுபவர் மாநகராட்சி ஊழியர் தானா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது.

போனில் பேசுபவர், ‘‘இப்பவே வரியை கட்டிடுங்க… மண்டல ஆபீசுக்கு நேர்லதான் வரணும். ஆனால், உங்களுக்கு அந்த சிரமமெல்லாம் தேவையில்லை. நீங்க ஜி-பே வச்சுருக்கீங்களா ? நீங்க பேசுறது ஜி-பே நம்பர்தான். இந்த நம்பருக்கே அனுப்பிடுங்க. ரசீது போட்டு வாட்ஸ் ஆப்பில் போட்டு விடுகிறோம்’’ என்கிறார். சிலர் உஷாராகி ஆன்லைனில் பார்த்தால், அவர்கள் கூறும் அளவுக்கு வரி பாக்கி இல்லை; அல்லது வரி பாக்கியே இல்லை என்பது தெரிய வருகிறது. இது குறித்து வரி செலுத்துவோர் சிலர் கூறியதாவது: மாநகராட்சியில் இருந்து போன் வருகிறதே என முக்கியத்துவம் கொடுத்து பேசினாலும், ஆன்லைனில் கட்டி விடலாம் எனக் கருதி மாநகராட்சி இணையதளத்தில் பார்த்தால் வரி பாக்கியே இல்லை. அவர்கள் உண்மையிலேயே மாநகராட்சி ஊழியர்களா அல்லது வரி செலுத்துவோரின் தகவல்களை அறிந்து கொண்டு வேறு யாரோ ஏமாற்றி பணம் பறிக்க முயற்சிக்கிறார்களா என்பது தெரியவில்லை.

குடிநீர் வரி செலுத்துவதற்கான https://cmwssb.tn.gov.in/online-water-tax-payment இணையதளத்தில் போன் நம்பரை போட்டாலே, அதனுடன் இணைத்துள்ள சொத்து விவரங்கள், வரி செலுத்துவோர் விவரங்கள் தெரிந்து விடுகிறது. இதுபோல், மண்டலம், வார்டை தேர்வு செய்து தெரு பெயர், சொத்து உரிமையாளர் பெயரை போட்டாலும் போன் நம்பருடன் அனைத்து விவரங்களும் வந்து விடுகிறது. இணையதளத்தில் வெளிப்படையாக இத்தகைய தகவல்கள் வருவதை, மோசடி பேர்வழிகளுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர். இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

The post சொத்து வரி வசூல் என்ற பெயரில் மாநகராட்சியிலிருந்து பேசுவதாக கூறி மக்களை ஏமாற்றி பணம் பறிக்க முயற்சி: மோசடி கும்பலை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article