சென்னை: ஆண்டுதோறும் சொத்து வரியை 6 சதவீதம் உயர்த்தும் அரசின் உத்தரவை செயல்படுத்தும் விதமாக சென்னை மாநகராட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்துக்கு அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: சென்னை மாநகராட்சியில் நிறைவேற்றப்பட்ட, ஆண்டுதோறும் 6 சதவீத சொத்து வரி உயர்வு மற்றும் மயானபூமி அமைக்க தனியாருக்கு அனுமதி வழங்குவது ஆகிய இரு தீர்மானங்கள், மக்களின் பாக்கெட்டுகளில் இருந்து நேரடியாக பணத்தை பிடுங்கும் வகையில் இருப்பது கண்டனத்துக்குரியது. ஆண்டுக்கு 6 சதவீதம் சொத்து வரி உயர்வை அறிவித்து, மாநகர மக்களின் தலையில் இடியை இறக்கியுள்ளது. இதன் மூலம் குடிநீர் வரி, கழிவு நீர் அகற்றல் வரியும் தானாக உயர்ந்துவிடும். வியாபார நோக்கில் மயானத்தை தனியார்மயமாக்கல் என்பதை அதிமுக கடுமையாக எதிர்க்கும்.