சொத்து தகராறில் தாய், சகோதரியை கொன்ற மகன் கைது

2 hours ago 3

புவனேஷ்வர்,

ஒடிசாவின் சம்பல்பூர் மாவட்டத்தில் தனது 90 வயது தாய் மற்றும் 62 வயது சகோதரியை வீட்டில் கொலை செய்த ஒரு நபரையும் அவரது மகனையும் கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு சம்பல்பூர் சதார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஹடபாடா பகுதியில் உள்ள அவர்களது வீட்டின் முதல் தளத்தில் சினேகலதா தீட்சித் (90) மற்றும் அவரது மகள் சைரேந்திர தீட்சித் (62) ஆகியோரின் உடல்கள் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டன.

ஆரம்பத்தில், இது இயற்கைக்கு மாறான மரணம் என்று கருதப்பட்டது, ஆனால் இறந்தவரின் குடும்ப உறுப்பினர்களிடம் நடத்திய விசாரணையில் இது கொலை வழக்கு என கண்டறியப்பட்டது. அதன்படி, சினேகலதாவின் மகன் ஜெகநாத் மற்றும் பேரன் சங்கேத் ஆகியோர் கைது செய்யப்பட்டனர் என்று சம்பல்பூர் ஏ.எஸ்.பி அஜய் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

இது சொத்து தகராறில் முன்கூட்டியே திட்டமிட்ட கொலை என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இரண்டு பெண்களின் கழுத்தை முதலில் நெரித்து கொன்று, பின்னர் அவர்களின் உடலில் தீ வைத்து எரிக்கப்பட்டதை கண்டறிந்துள்ளோம். இருப்பினும் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியான பிறகே முழு விவரம் தெரியவரும் என்று அஜய் தெரிவித்தார்.

கொல்லப்பட்ட சினேகலதா அவரது மகளுடன் வீட்டின் முதல் தளத்திலும் அவரது மகன் தனது குடும்பத்துடன் தரை தளத்தில் வசித்து வந்ததாக மற்றொரு போலீஸ் அதிகாரி தெரிவித்தார். நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் முதல் தளத்தில் தீப்பற்றி எரிவதை கண்ட அக்கம்பக்கத்தினர் தகவல் தெரிவித்ததாக அவர் தெரிவித்தார். முன்னதாக, சினேகலதா இளைய மகள் இந்திராணி, நிலம் மற்றும் சொத்து தகராறில் இருவரையும் அவரது சகோதரர் கொன்றதாக குற்றம் சாட்டியிருந்தார். 

Read Entire Article