சைக்கிளிங் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற தமிழக வீராங்கனைகள் - உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து

3 hours ago 2

சென்னை,

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் இந்திய சைக்கிளிங் கூட்டமைப்பு ஒன்றிணைந்து நடத்திய 76-வது தேசிய டிராக் சைக்கிளிங் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த சைக்கிளிங் வீராங்கனைகள், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பாராட்டும், வாழ்த்தும் பெற்றனர். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

"தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 15.11.2024 அன்று செங்கல்பட்டு மாவட்டம், மேலக்கோட்டையூரில் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள சைக்கிளிங் ஓடுதளத்தில், 76-வது தேசிய டிராக் சைக்கிளிங் சாம்பியன்ஷிப் போட்டியை தொடங்கி வைத்தார்.

இப்போட்டி ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் யூத் (Youth): 12 - 14 வயதுக்கு உட்பட்டோர், சப்-ஜூனியர் (Sub-Junior): 15 - 16 வயதுக்கு உட்பட்டோர், ஜூனியர் (Junior): 17 - 18 வயதுக்கு உட்பட்டோர், எலைட் (Elite): 19 வயது மேற்பட்டவர் என தலா நான்கு உட்பிரிவுகளை கொண்டு நடத்தப்பட்டது. இப்போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 41 வீரர், வீராங்கனைகள் உள்பட, 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்களை சேர்ந்த 700-க்கும் மேற்பட்ட சைக்கிள் பந்தய வீரர்கள் பங்கேற்றனர்.

76-வது தேசிய டிராக் சைக்கிளிங் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்ற சைக்கிள் பந்தய ஒடுதளம், SDAT யால் ரூ.1 கோடியில் புதுப்பிக்கப்பட்ட சைக்கிள் ஓட்டுதல் Velodrome ஆகும். இது தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளை நடத்தும் வசதி கொண்ட சைக்கிள் பந்தய ஒடுதளமாகும். 333.333 மீட்டர்கள் கொண்ட இந்த சைக்கிளிங் டிராக், மிக முன்னோடியான, உலகத் தரம் வாய்ந்த (ஓட்டுதல் தடங்களில்) ஒன்றாகும்.

தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையின் மூலம், தகுதியான 11 சைக்கிளிங் விளையாட்டு வீரர், வீரங்கனைகள்களுக்கு சுமார் ரூ.1 கோடியே 67 லட்சம் உயர்தர அதிநவீன பந்தய சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளன. இவர்கள் இந்த போட்டியில் முழு ஈடுபாட்டுடன் கலந்து கொண்டு வெற்றிகளை பெற்றனர்.

76-வது தேசிய டிராக் சைக்கிளிங் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த சைக்கிள் பந்தய வீராங்கனைகள் ஹாசினி, ஜெய் ஜோஷ்னா, தபிதா ஆகியோர் கொண்ட குழுவினர் டீம் ஸ்பிரிண்ட் (TEAM SPRINT) போட்டியில் சப் ஜூனியர் பிரிவில் தங்கம் வென்றனர். 500 மீட்டர் தனிநபர்களுக்கான (INDIVIDUAL) சப் ஜூனியர் பிரிவில் டைம் டிரையல் (TIME TRIAL) போட்டியில் தபிதா தங்கப்பதக்கத்தையும், ஜெய் ஜோஷ்னா வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

17 – 18 வயதுடைய ஜூனியர் பிரிவில் 3,000 மீட்டர் பந்தய தூரம் கொண்ட டீம் பெர்ஷூட் (TEAM PURSUIT) போட்டியில் தன்யதா, கார்த்தியாயினி, நிறைமதி, பூஜா ஸ்வேதா ஆகியோர் கொண்ட குழுவினர் தங்கப்பதக்கம் வென்றனர். 17 – 18 வயதுடைய ஜூனியர் பிரிவில் டீம் ஸ்பிரிண்ட் (TEAM SPRINT) போட்டியில் தன்யதா, நிறைமதி, பூஜா ஸ்வேதா ஆகியோர் கொண்ட குழுவினர் தங்கப்பதக்கம் வென்றனர்.

மேலும் தனிநபர் போட்டிகளான ஸ்க்ராச் பந்தய (SCRATCH RACE) மற்றும் இன்டிவிஜிவல் பெர்ஷியூட் (INDIVIDUAL PURSUIT) போட்டிகளில் தன்யதா வெள்ளிப்பதக்கம் வென்றார். தனிநபர் போட்டியான கெய்ரின் (KEIRIN) சைக்கிளிங் போட்டியில் பூஜா ஸ்வேதா வெள்ளிப்பதக்கத்தையும் வென்றார். 76-வது தேசிய டிராக் சைக்கிளிங் சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்கள் ஜூனியர் பிரிவில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தை பிடித்தது.

இந்நிகழ்ச்சியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி மற்றும் தமிழ்நாடு சைக்கிளிங் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article