தாம்பரம்: சேலையூர் அருகே சாலையோரம் காயங்களுடன் மர்மமான முறையில் வாலிபர் இறந்து கிடந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய பெண்ணிடம் வாங்கிய 2 கிராம் நகை மற்றும் 11 ஆயிரம் ரொக்கப் பணத்திற்காக அவரது சித்தி மகன் மற்றும் நண்பர்கள் 8 பேர் சேர்ந்து 2 நாட்கள் தொடர்ந்து மது வாங்கி கொடுத்து சரமாரியாக அடித்து கொலை செய்தது தெரியவந்துள்ளது. தாம்பரம் – வேளச்சேரி பிரதான சாலை, சந்தோஷபுரம் பகுதியில் உள்ள வனத்துறை அலுவலகம் அருகே கடந்த மாதம் 28ம் தேதி சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் சாலையோரமாக உடம்பில் காயங்களோடு மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த சேலையூர் காவல் நிலைய போலீசார் உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், கொலையா என்ற கோணத்தில் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து வாலிபர் சடலமாக கிடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை சேகரித்து விசாரணை நடத்தினர். அப்போது இரண்டு பேர் அந்த வாலிபரை இரு சக்கர வாகனத்தில் கொண்டு வந்து சாலையோரம் வீசிவிட்டு செல்லும் காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இதைத்தொடர்ந்து, அந்த மர்ம நபர்கள் வந்த இரு சக்கர வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து போலீசார் சரவணன் என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், சென்னை, வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த ஜெயக்குமார்(35) என்பவர் கிண்டி, மடுவன்கரை பகுதியில் தங்கி அங்குள்ள பிரியாணி கடையில் மாஸ்டராக வேலை செய்து வந்துள்ளார்.
காதல் திருமணம் செய்துகொண்ட ஜெயக்குமார், பின்னர் மனைவி மற்றும் மகளை பிரிந்து வாழ்ந்து வந்ததாகவும், அவரது பெற்றோர்களிடமும் தொடர்பில் இல்லாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ஜெயக்குமார் குரோம்பேட்டை பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு அந்த பெண் வேலை தேடி வந்ததால் அவருக்கு ரிசப்ஷினிஸ்ட் வேலை வாங்கி தருவதாகவும் கூறி பழகி வந்துள்ளார். பின்னர் தனக்கென யாரும் இல்லை. எனவே இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என அந்த பெண்ணிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, ஜெயக்குமாரின் நண்பர் ஒருவருக்கு தெரிய வர அவர் அந்த பெண்ணை எச்சரித்து உள்ளார். இதை தொடர்ந்து அந்த பெண் ஜெயக்குமாரை விட்டு விலகியுள்ளார். மேலும் அந்த பெண் ஜெயக்குமாருடன் பழகிய நாட்களில் ஜெயக்குமார் அந்த பெண்ணிடம் இருந்து இரண்டு கிராம் தங்க நகை மற்றும் 11 ஆயிரம் ரொக்கம் பெற்றிருந்ததாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து அந்த பெண் குரோம்பேட்டை பகுதியை சேர்ந்த அவரது சித்தி மகன் சரவணன்(32) என்பவரிடம் இதுகுறித்து தெரிவித்து பணம் மற்றும் நகையை வாங்கித் தரும்படி கூறியுள்ளார்.
இதையடுத்து, சரவணன் குரோம்பேட்டை பகுதியை சேர்ந்த தனது நண்பர் விக்கி(எ) விக்னேஷ் (31) என்பவரிடம் தெரிவித்துள்ளார். எனவே, விக்னேஷ் கிண்டிக்கு சென்று ஜெயக்குமாரை அழைத்துக் கொண்டு பல்லாவரத்தில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் அறை எடுத்து ஜெயக்குமாரை மதுபானம் குடிக்க வைத்து அந்த பெண்ணிடம் இருந்து பெற்ற பணத்தை கேட்டு அடித்ததாக கூறப்படுகிறது. பின்னர் சரவணன், விக்னேஷ், மற்றும் நண்பர்களான தினேஷ்(33), ராகேஷ்(24), பிரதீப்(24), சச்சின்(20) மற்றும் இருவர் என 8 பேர் கும்பல் இரண்டு நாட்களாக பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று ஜெயக்குமாரை மதுபானம் குடிக்க வைத்து கடுமையாக அடித்துள்ளனர். பின்னர் இறுதியாக குன்றத்தூர் பகுதியில் உள்ள கோயிலின் பின்புறம் இருக்கும் தோப்பிற்கு அழைத்துச் சென்று அங்கு மீண்டும் ஜெயக்குமாரை மதுபானம் குடிக்க வைத்து அடித்துள்ளனர்.
பின்னர் ஜெயக்குமாரை சரவணன், தினேஷ் ஆகியோர் இரு சக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சந்தோஷபுரம் பகுதியில் தாம்பரம் – வேளச்சேரி பிரதான சாலையில் வனத்துறை அலுவலகம் அருகே வீசிவிட்டு தப்பி சென்றது விசாரணையில் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட சரவணன், தினேஷ், ராகேஷ், பிரதீப், சச்சின், விக்னேஷ் உள்ளிட்ட 8 பேரை சேலையூர் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
The post சேலையூர் அருகே சாலையோரம் வாலிபர் இறந்து கிடந்த வழக்கு இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய பெண்ணின் தம்பி, நண்பர்கள் அடித்து கொன்றது அம்பலம்: 2 கிராம் நகை, ரூ.11 ஆயிரத்திற்காக மது வாங்கி கொடுத்து தீர்த்துக்கட்டினர் 6 பேர் கைது; 2 பேருக்கு போலீஸ் வலை appeared first on Dinakaran.