சேலம்: சேலம் பிரபல ரவுடி ஜான் கொலையில் மேலும் 5 பேர் சிக்கியுள்ளனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் அண்ணன் கொலைக்கு தம்பி பழிதீர்த்த பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. சேலம் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜான் (எ) சாணக்யா (35). பிரபல ரவுடியான இவர் மீது நெப்போலியன், ரவுடி செல்லதுரை ஆகியோர் கொலை வழக்கு உள்பட 12 வழக்குகள் இருக்கிறது. நேற்றுமுன்தினம் கஞ்சா வழக்கு தொடர்பாக அன்னதானப்பட்டி போலீஸ் ஸ்டேசனில் ரவுடி ஜான் கையெழுத்து போட்டு விட்டு, மனைவி சரண்யாவுடன் காரில் ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்தார்.
சித்தோடு நசியனூர் பகுதியில் சென்ற போது, ரவுடி கும்பலை சேர்ந்தவர்கள் இன்னொரு காரில் வந்து மோதி நிறுத்தினர். பின்னர் காருக்குள் வைத்தே ஜானை வெட்டி படுகொலை செய்தனர். இக்கொலை கும்பலை சேர்ந்த சேலம் கிச்சிபாளையம் கார்த்திகேயன் (28), சதீஸ் (30), சரவணன் (28), பூபாலன் (28) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களில் சதீஸ், சரவணன், பூபாலன் ஆகியோர் இன்ஸ்பெக்டர் மற்றும் காவலரை தாக்கிவிட்டு தப்ப முயன்றபோது போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.
பட்டப்பகலில் நடந்த இக்கொலை தொடர்பாக சித்தோடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய விசாரணையில் அண்ணனின் கொலைக்கு பழிக்குப்பழியாக இந்த கொலை சம்பவம் நடந்திருப்பது தெரியவந்தது. சேலத்தில் ரவுடியாக இருந்த செல்லதுரையும், ஜானும் இணைந்து கொலை, அடிதடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். கருத்து வேறுபாட்டால் இருவருக்கும் இடையே விரோதம் ஏற்பட்டு பிரிந்தனர்.
இதைத்தொடர்ந்து, கடந்த 2020 டிசம்பர் மாதம் வெளியூரில் இருந்து ரவுடிகளை அழைத்து வந்து காரில் சென்ற செல்லதுரையை விபத்து ஏற்படுத்தி ஜான் கொலை செய்துள்ளார். இதையடுத்து, ஜானை பழி தீர்க்க செல்லதுரையின் தம்பி ஜீவகன் முடிவெடுத்தார். இதற்காக கடந்த 2020 முதல் காத்திருந்த ஜீவகன் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து ஜானை கொலை செய்ய முடிவு செய்தார். கடந்த திங்கட்கிழமை முதல் சேலத்தில் இருந்து ஜானை பின் தொடர்ந்து 3 நாட்களாக திட்டமிட்டும் முடியவில்லை.
நேற்று முன்தினம் ஜானை கொலை செய்ய 2 கார்களில் பின்தொடர்ந்து வந்த ஜீவகன் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து சங்ககிரி சுங்கச்சாவடி அருகே ஜானை கொலை செய்ய திட்டமிட்டிருந்தார். ஆனால், அங்கு திட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை. இதையடுத்து காரில் பின் தொடர்ந்து வந்து, நசியனூர் அருகில் ஜானின் காரில் மோதி விபத்தை ஏற்படுத்தி அவரை கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதற்கிடையில் ரவுடி ஜானின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு நேற்று பகல் சேலம் கிச்சிப்பாளையத்தில் உள்ள வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இறுதி சடங்குகளை முடித்த பிறகு நாமக்கல் மாவட்டம் பாண்டமங்கலம் அருகேயுள்ள சாணார்பாளையத்தில் உடல் அடக்
கம் செய்யப்பட்டது.
* கைதானவர்களில் 3 பேர் தவாகவை சேர்ந்தவர்கள்
சேலம் கிச்சிப்பாளையம் ரவுடி சூரியின் மகன் நெப்போலியன் கடந்த 2015ல் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதில் முதல் குற்றவாளியாக ஜான் சேர்க்கப்பட்டார். அவரது தாய் மாமனான அதிமுகவை சேர்ந்த பழனிசாமி, தம்பி சாரதி, ஏற்கனவே கொலை செய்யப்பட்ட ரவுடி செல்லதுரை, அவரது தம்பி ஜீவகன் உள்பட 20 பேர் நெப்போலியன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டனர். அதே போல செல்லதுரை கொலை வழக்கில் சூரியின் மகன்கள் சிலம்பரசன், ஜீசஸ், டெனிபா மற்றும் சதீஷ், ரவுடி ஜான், அவரது தம்பி சாரதி, தந்தை சாமிதாஸ், தாய் கனகா உள்பட 32 பேர் கைது செய்யப்பட்டனர்.
நெப்போலியன் கொலை வழக்கில் ஜான் தரப்பினர் குற்றவாளிகளாகவும், செல்லதுரை கொலை வழக்கில் சூரியின் மகன்கள் குற்றவாளிகளாகவும் இருக்கின்றனர். இரு தரப்பினருக்கும் பொது எதிரியான செல்லதுரை கொலை செய்யப்பட்டதால், இனிமேல் நாம் ஒன்றாகிவிடுவோம் என இருவரும் சமாதானம் பேசினர். அதே நேரத்தில் போலீசாரின் கடும் நெருக்கடியின் காரணமாக ஜான் ஊத்துக்குளியில் மாமனார் வீட்டில் தங்கியிருந்தார்.
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஜானுடன், விஜயமங்கலம் டோல்கேட் அருகில் வைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஜானிடம் அதிகளவில் பண புழக்கம் இருந்தது. இதனால் சாட்சிகளுக்கு பணம் கொடுத்து சரி செய்துவிட முடிவு செய்துள்ளனர். இந்த பேச்சுவார்த்தையில் நெப்போலியன் கொலை வழக்கில் கைதான சலீம், சரவணன், சதிஷ் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். இதையடுத்து முக்கிய சாட்சியான நெப்போலியன் தந்தை ரவுடி சூரிக்கு பெரும் தொகையை ஜான் கொடுத்துள்ளார்.
இதன்காரணமாகவே மகன் கொலை வழக்கில் தந்தை சூரி பிறழ்சாட்சியம் அளித்துள்ளது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பணம் கைமாறிய தகவலை கொலையான ஜான், உளவுப்பிரிவு போலீசாரிடமும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஜான் கொலை வழக்கில் கைதான சதிஷ், சலீம், சரவணன் ஆகியோர் ஜானுடன் நெப்போலியன் கொலை வழக்கிலும் கைதானவர்கள். அவர்கள் எப்படி ஜானை தீர்த்து கட்டினார்கள் என்ற பரபரப்பு கேள்வியும் எழுந்துள்ளது.
கைதான பூபாலன், சரவணன், சலீம் ஆகியோர் தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிர்வாகிகளாக இருந்துள்ளனர். மேலும் நேற்று விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர்களில் வக்கீல் பெரியசாமியும், தமிழக வாழ்வுரிமை கட்சியின் வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஆவார். இவர்களுடன் கொலை செய்யப்பட்ட ஜானும் வேல்முருகனை சந்தித்து அக்கட்சியில் இணைந்துள்ள தகவலும் வெளியாகியுள்ளது. இதனால் கட்சியில் யார் பெரியவர் என்ற மோதலும் இக்கொலைக்கு ஒரு காரணமாக இருக்குமா? என்ற சந்தேகமும் போலீசாருக்கு எழுந்துள்ளது.
* மேலும் 5 பேர் சிக்கினர் 2 பேர் கோர்ட்டில் சரண்
ரவுடி ஜான் கார் மீது மோதிய காரில் வந்த 4 ேபர் மட்டும் நேற்று முன்தினம் சிக்கினர். கொலை சம்பவத்துக்குப் பின்னர் மற்றொரு காரில் வந்த ரவுடி ஜானால் கொல்லப்பட்ட செல்லதுரையின் தம்பி ஜீவகன் உள்ளிட்ட கும்பலை சேர்ந்தவர்கள் தப்பினர். அவர்களை பிடிக்க பவானி, பெருந்துறை, ஈரோடு டிஎஸ்பிக்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில் அவர்கள் சேலத்தில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. நேற்று சித்தோடு போலீசார் சேலம் வந்தனர்.
இவர்கள் கிச்சிப்பாளையத்தை சேர்ந்த வக்கீல் பெரியசாமி, நெப்போலியன் கொலை வழக்கில் கைதான பார்த்திபன், அழகரசன், சேதுவாசன், சிவக்குமார் ஆகியோரை கைது செய்து விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர். அவர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், ஜீவகன், சலீம் ஆகிய 2 பேர் ஈரோடு நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தனர். தலைமறைவாக உள்ள மொன்னை துரைசாமி என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
* செல்லதுரை மனைவிகளும் எஸ்கேப்
ரவுடி செல்லதுரை கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 2வது மனைவியின் வீட்டுக்கு சென்றபோது அவரை ரவுடிகள் சுற்றிவளைத்து காருக்குள் வைத்தே கொலை செய்தனர். அதேபோல் தான் தற்போது ஜானும் கொலை செய்யப்பட்டுள்ளார். செல்லதுரையின் இரண்டு மனைவிகளும் பழிக்கு பழிவாங்குவோம் என அப்போது சபதம் எடுத்தனர். தற்போது ஜான் கொலை செய்யப்பட்ட நிலையில் அவர்கள் இருவரையும் தேடி போலீசார் அவர்களது வீட்டுக்கு சென்றபோது தலைமறைவாகிவிட்டனர். தொடர்ந்து அவர்களுக்கு இந்த கொலையில் தொடர்பு உள்ளதா என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
The post சேலம் ரவுடி கொடூர கொலை ஏன்? அண்ணனுக்காக பழி தீர்த்த தம்பி, பரபரப்பு தகவல்கள் appeared first on Dinakaran.