சேலம்: சேலம் அம்மாபேட்டையில் உள்ள திருமண மண்டபத்தில் அறக்கட்டளை நடத்தி, பணம் இரட்டிப்பு தருவதாக மக்களிடம் இருந்து ரூ.500 கோடிக்கு மேல் வசூல் செய்யப்பட்டு மோசடி செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி விசாரித்த சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், அந்த மண்டபத்தில் சோதனையிட்டு ரூ.12.68 கோடி பணம், 2.5 கிலோ தங்கம், 13 கிலோ வெள்ளியை பறிமுதல் செய்தனர். அறக்கட்டளை நிர்வாகிகள் விஜயாபானு, ஜெயபிரதா, பாஸ்கர், சையத் மஹ்மூத் ஆகிய 4 பேரை கைது செய்து, கோவை சிறையில் அடைத்தனர்.
இந்த மோசடி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்கள், சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் தொடர்ந்து புகார்களை கொடுத்து வருகின்றனர். இங்கு மோசடியில் ஈடுபட்ட விஜயாபானு, இதற்கு முன் வேலூர், சென்னை, காஞ்சிபுரம், ஆந்திராவில் பல்வேறு வகையில் பண மோசடியில் ஈடுபட்டதும், போலி ஐபிஎஸ் அதிகாரியாக செயல்பட்டு சிலரை ஏமாற்றியதும் தெரியவந்துள்ளது. அதனால், அவர் இதுவரை எங்கெல்லாம் மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்பது பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே கைதான 4 பேரும் மோசடி செய்த பணத்தை வங்கிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன் கைதான சையத் மஹ்மூத் பெயரில் சேலம் தனியார் வங்கியில் இருந்த ரூ.84 லட்சம் பணத்தை முடக்கினர். தொடர்ந்து, அறக்கட்டளை விஜயாபானு, ஜெயபிரதாவுக்கு எந்தெந்த வங்கிகளில் கணக்குகள் இருக்கிறது என போலீசார் ஆய்வு செய்தனர்.
அதில், சேலத்தில் உள்ள 2 தனியார் வங்கிகளில் இருவரது பெயரிலும் 7 சேமிப்பு கணக்குகள் இருந்ததை கண்டறிந்தனர். அவற்றில் விஜயாபானு பெயரில் ரூ.1.10 கோடியும், ஜெயபிரதா பெயரில் ரூ.90 லட்சமும் பணம் இருந்தது. உடனே 2 தனியார் வங்கிகளுக்கும் கடிதம் வழங்கி, அந்த 7 கணக்குகளில் இருந்த ரூ.2 கோடி பணத்தையும் நேற்று பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கினர்.
The post சேலத்தில் ரூ.500 கோடி மோசடி விவகாரம் வங்கி கணக்கில் இருந்த ரூ.2 கோடி பணம் முடக்கம்: பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அதிரடி நடவடிக்கை appeared first on Dinakaran.