சென்னை: சேலத்தில் கலைஞர் சிலை மீது கருப்பு பெயின்ட் வீசி அவமதித்திருக்கும் செயலானது, அமைதியான தமிழகத்தை அமளிக் காடாக்கி அரசியல் ஆதாயம் தேடும் முயற்சி என்று தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
* செல்வப்பெருந்தகை (காங்கிரஸ் மாநில தலைவர்): சேலம், அண்ணா பூங்கா முன்பு அமைக்கப்பட்டிருந்த, முன்னாள் முதல்வர் கலைஞரின் சிலை மீது சில விஷமிகள் கருப்பு பெயிண்ட் ஊற்றி சேதப்படுத்தியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கின்றேன். மறைந்த தலைவர்களின் சிலைகளை அவமதிப்பதைத் தடுத்து நிறுத்துவதற்கு காவல்துறையினர் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
* வைகோ (மதிமுக): சேலம் அண்ணா பூங்காவில் கலைஞர் சிலை மீது சமூக விரோதிகள் கருப்பு பெயின்ட் பூசி அவமதிப்பு செய்துள்ளது கடும் கண்டனத்துக்குரியது. தமிழகத்தின் அரசியல் பண்பாட்டை சிதைத்து அமைதியை சீர்குலைக்க முயலும் இத்தகைய சக்திகளை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட்): தமிழக மக்களின் பேராதரவையும், பெருமதிப்பையும் பெற்றுத் திகழும் கலைஞரின் சிலை, அண்மையில் சேலம் மாநகரில் அண்ணா பூங்காவில் திறந்து வைக்கப்பட்டது. இந்த வெண்கலச் சிலை மீது கறுப்பு பெயின்ட் வீசி, அவமதிக்கும் ஈனத்தனமான செயலை வன்மையாக கண்டிக்கிறோம். கடந்த சில ஆண்டுகளாக அரசியலை காவிமயமாக்கி வரும் சங் பரிவார் கும்பல் இத்தகைய இழி செயல்களில் ஈடுபட்டு வருவதை இதுவரை நடந்த சம்பவங்களின் விசாரணை நடவடிக்கைகள் உறுதி செய்துள்ளன.
இந்த கூட்டம் இப்போது கலைஞர் சிலை மீது கறுப்பு பெயின்ட் வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இது தமிழ்நாட்டை பெரும் அமளிக் காடாக்கி, அரசியல் ஆதாயம் தேடும் மலிவான அரசியல் சதியின் ஒரு வடிவமாகும். கலைஞர் சிலை மீது கறுப்பு பெயின்ட் வீசிய குற்றச் செயலில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு, சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க விடாமல் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.
* பெ.சண்முகம் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்): கலைஞரின் வெண்கல சிலை மீது சமூக விரோத சக்திகள் கறுப்பு பெயின்ட் வீசி அவமதித்துள்ளனர். இதை வன்மையாக கண்டிக்கிறோம். எம்.ஜி.ஆர். சிலைக்கு காவித் துண்டு போர்த்துவது, பெரியார், அம்பேத்கர் சிலைகளை அவமதிப்பது, திருவள்ளுவருக்கு காவிச் சாயம் பூசுவது போன்ற அவமதிக்கும் செயல்கள் கடந்த சில ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது. கடந்த காலத்தில் இந்த குற்றச்செயலில் ஈடுபட்டவர்களில் பலரும் சங்பரிவார் அமைப்பைச் சார்ந்தவர்கள் என்பதை பார்க்க முடிந்தது.
கருத்துகளை எதிர்கொள்வதற்கு பதிலாக கருத்தை சொல்லும் நபர்கள் மீது தாக்குதல் நடத்துவது, மறைந்த தலைவர்கள் என்றால் அவர்களின் சிலையை சேதப்படுத்துவது என்பது ஒரு போக்காகவே மாறியிருக்கிறது. இது நாகரிக சமூகத்திற்கு ஏற்புடையது அல்ல. எனவே, கலைஞர் சிலை மீது கறுப்பு பெயின்ட் வீசிய குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும்.
The post சேலத்தில் கலைஞர் சிலை அவமதிப்பு அமைதியான தமிழகத்தை அமளி காடாக்கி அரசியல் ஆதாயம் தேடும் முயற்சி: அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் appeared first on Dinakaran.