சேதமடைந்த சாலையை சீரமைக்க கோரி நாற்றுநடும் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்: நடவடிக்கை எடுப்பதாக வருவாய்த்துறையினர் உறுதி

3 weeks ago 3

பொன்னேரி: மீஞ்சூர் அருகே, சேதமடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தி கிராம மக்கள் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த நாலூர் ஊராட்சிக்கு உட்பட்ட கம்மவார்பாளையம், அண்ணா நகர் பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதிகளில் சில தனியார் நிறுவனங்களும் இயங்கி வருகிறது. இந்த தனியார் நிறுவனங்களுக்கு நாள்தோறும் 100க்கும் மேற்பட்ட கன்டெய்னர் லாரிகள் வந்து செல்வது வழக்கம்.

இதனால், அப்பகுதியில் உள்ள சாலைகள் மிகவும் சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. மேலும், மழைக்காலங்களில் சாலை முழுவதும் மழைநீர் தேங்கி, சேறும் சகதியுமாய் காட்சியளிக்கிறது. இதனால், இந்த சாலை வழியாக பள்ளி-கல்லூரிக்குச் செல்லும் மாணவர்கள், வேலைக்குச் செல்வோர், நோயாளிகள், இருசக்கர வாகனங்களில் செல்வோர் உட்பட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர்.

மேலும், குண்டும் குழியுமான சாலையில் செல்லும்போது கண்டெனர் லாரிகள் எப்போது தங்கள் மீது கவிழ்ந்து விபத்து ஏற்படுமோ என்ற அச்சத்திலே சாலையில் பயணிப்பதாகவும் அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, ஊராட்சி நிர்வாகம், வட்டார வளர்ச்சி அலுவலகம் என சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்நிலையில், பொன்னேரி-திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் இருந்து கம்மவார்பாளையம் கிராமத்திற்குச் செல்லும் குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் நேற்று நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீசார் அங்கு குவிக்கப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இதுகுறித்து தகவலறிந்ததும், மீஞ்சூர் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் மகிதா அன்னா திருஷ்டி சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது, ஊராட்சி மன்ற தலைவர் சுஜாதா ரகு, சிஐடியு மாவட்ட தலைவர் கதிர்வேல், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சந்தானம், ஒன்றியச் செயலாளர் ஜெயவேல், ஒன்றிய உறுப்பினர் கவிதா, ம.தி.மு.க. மாவட்ட பிரதிநிதி பாபு, மோகன் மற்றும் பொன்னேரி வருவாய்த்துறை அதிகாரிகள் அனைவரும் 1 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து, உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக வருவாய் துறையினர் உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

 

The post சேதமடைந்த சாலையை சீரமைக்க கோரி நாற்றுநடும் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்: நடவடிக்கை எடுப்பதாக வருவாய்த்துறையினர் உறுதி appeared first on Dinakaran.

Read Entire Article