செல்வம் தரும் துளசி விரதம்!

2 months ago 8

அபிஷேகப் பிரியரான சிவபெருமானுக்கு உகந்த இலை வில்வம். அதைப் போல் அலங்காரப் பிரியரான திருமாலுக்கு உகந்தது துளசி. திருமாளின் திருமார்பில் மாலையாக மகிழ்வோடு காட்சித் தருபவள் துளசி தேவி. துளசி என்ற சொல்லுக்கு தன்னிகரற்றது என்று பொருளாகும். துளசி செடியின் நுனியில் பிரம்மாவும், அடியில் சிவபெருமானும், மத்தியில் திருமாலும் வாசம் செய்வதாக ஐதீகம். அதனால்தான் துளசியை புனிதமாக வழிபடுகிறார்கள்.

துளசி பூஜை செய்தால் திருமணமாகாதப் பெண்களுக்கும் திருமணம் கைகூடும். கார்த்திகை மாதம் பவுர்ணமி தினத்தன்று துளசித் தாய் அவதரித்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. அன்று துளசித் தாய்க்கு பூஜை செய்வது மிகுந்த பலனைத் தரும். துளசி பூஜை செய்ய வாரத்தில் செவ்வாய்க்கிழமையும், வெள்ளிக்கிழமையும் கார்த்திகை மாதம் வளர்பிறை துவாதசியும் ஏற்ற நாட்கள். கார்த்திகை மாதம் ஏகாதசிக்கு மறுநாள் துவாதசி அன்று காலை சுமங்கலிப் பெண்கள் குளித்து விட்டு துளசி மாடத்தைச் சுற்றி மெழுகி கோலமிட்டு காவி பூச வேண்டும்.

சாதம், பால் பாயசம், வெற்றிலை, பாக்கு, மஞ்சள் பழங்கள், தேங்காய் வைத்து பூஜை செய்ய வேண்டும். ஒரு விளக்குத் திரியை நெய்யில் வைத்து தீபம் ஏற்றி வணங்க வேண்டும். துளசி லட்சுமி வடிவானவள். துளசிச் செடியுடன் நெல்லி மரக்குச்சி (மகாவிஷ்ணு வடிவம்) சேர்த்து வைக்க வேண்டும்.

வீட்டில் சாளகிராமம் இருந்தால் அதனையும் துளசி மாடத்தில் வைத்து பூஜை செய்ய வேண்டும். நிவேதனமாக சர்க்கரைப் பொங்கல் வைத்து வணங்க வேண்டும். துளசி பூஜைக்கு முன்னர் விக்னேஸ்வர பூஜை செய்ய வேண்டும். பூஜை முடிந்ததும் பெண்களுக்கு வெற்றிலை, பாக்கு, பூ, கண்ணாடி வளையல்கள் வைத்துக் கொடுக்க வேண்டும். ஓர் ஏழை அந்தணச் சிறுமியை மணையில் அமர வைத்து, சந்தனம் பூசி, குங்குமம், புஷ்பம், புதுத் துணி கொடுக்க வேண்டும். பால் பாயசத்தை பாத்திரத்துடன் தானம் கொடுக்கலாம். பவுர்ணமி, அமாவாசை, துவாதசி, ஞாயிற்றுக்கிழமை, கிரகண காலம், மதியம், சந்தியா காலம், இரவு முதலிய காலங்களில் துளசியைப் பறிக்கக் கூடாது.

கார்த்திகை மாதம் துளசி பூஜை செய்பவர்களுக்கும், துளசியால் பகவானை அர்ச்சனை செய்பவர்களின் கோரிக்கைகள் நிறைவேறும். பக்தியுடன் துளசி பூஜை செய்து வழிபடுபவர்கள் வீட்டில் செல்வம் கொழிக்கும். துர் மரணங்கள் ஏற்படாது. துளசி மாடம் இருந்தால் அதில் வளரும் துளசி செடிக்கு பூஜை செய்யலாம். துளசி மாடம்இல்லாதவர்கள் பன்னிரெண்டு அல்லது பதினாரு செங்கற்களால் துளசி பீடம் அமைத்து, அதன் முன்பு பெரிய அகல் தீபம் ஏற்றி வைத்து, பீடத்தின் நடுவில் துளசி செடியை வைத்து, பன்னிரெண்டு என்ற எண்ணிக்கையில் சந்தன குங்கும பொட்டுகள் வைத்து வழிபடலாம்.

– ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.

The post செல்வம் தரும் துளசி விரதம்! appeared first on Dinakaran.

Read Entire Article