
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையை சேர்ந்த கமலேஷ் (வயது 20). இவர் நெல்லையில் உள்ள தனியார் சோலார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் தனது நண்பரிடம் பேசுவதற்காக செல்போனில் சில எண்களை அழுத்தினார். அப்போது அவரது நண்பருக்கு பதிலாக, தவறுதலாக கழுகுமலை ஆறுமுகம்நகர் பகுதியை சேர்ந்த கருப்பசாமிக்கு போன் சென்றது.
முதலில் தவறுதலாக போன் செய்து விட்டதாக கூறிய கமலேஷ் மீண்டும், அதே எண்ணை அழுத்தி விட்டார். இதை தொடர்ந்து கமலேசுக்கும், கருப்பசாமிக்கும் இடையே செல்போனில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
சிறிது நேரத்தில் நடிகர் வடிவேலு சினிமா பாணியில் காமெடி போல முகவரியை சொல்லுடா என கூறிக்கொண்டு வாக்குவாதம் செய்துள்ளனர். அப்போது, கமலேஷ் உன் வீட்டு பகுதியில் உள்ள ஆறுமுகம்நகர் பஸ்நிறுத்தம் அருகே நான் வருகிறேன். தைரியம் இருந்தால் வா என கருப்பசாமியிடம் கூறினார். இதில், ஆத்திரமடைந்த கருப்பசாமி தனது நண்பர்களான மதன்குமார் (23), மதன்கிருஷ்ணகுமார் (20) ஆகியோருடன் ஆறுமுகம்நகர் பஸ்நிறுத்தம் பகுதிக்கு சென்றனர்.
அப்போது அங்கு கமலேஷ், அவரது அண்ணன் மாதேஷ் (23) மற்றும் உறவினர்கள் வந்தனர். இருதரப்பினரும் கைகலால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டு மோதலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இருதரப்பையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். இருதரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கருப்பசாமி, மதன்குமார், மதன்கிருஷ்ணகுமார், கமலேஷ், மாதேஷ் ஆகிய 5 பேரையும் அதிரடியாக கைது செய்தனர்.