செம்பனார்கோயில் அருகே நிலக்கடலை நடவு பணியில் விவசாயிகள் தீவிரம்

3 weeks ago 5

செம்பனார்கோயில், டிச.31: செம்பனார்கோயில் அருகே நிலக்கடலை நடவு பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் மற்றும் சுற்றுப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் நெல், பருத்தி, உளுந்து, பயறு வகைகள், வாழை, நிலக்கடலை, சோளம் உள்ளிட்ட விளைபொருட்களை சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது செம்பனார்கோயில் அருகே நடராஜப்பிள்ளைச்சாவடி, கருவிழந்தநாதபுரம், குரங்குப்புத்தூர், கிடாரங்கொண்டான் மற்றும் சுற்று பகுதியில் விவசாயிகள், வயல்களில் நிலக்கடலை நடவு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

அதன்படி நேற்று கருவிழந்தநாதபுரம் பகுதியில் விவசாய தொழிலாளர்கள், நிலக்கடலை விதையை நடவு செய்தனர். இதுகுறித்து நிலக்கடலை சாகுபடி விவசாயி கூறுகையில், மணற்பாங்கான வண்டல்மண், செம்மண் நிலங்கள் நிலக்கடலை சாகுபடிக்கு உகந்ததாகும். இதற்காக நிலத்தை நன்கு குறுக்கு உழவு செய்து, களைகளை நீக்க வேண்டும். சணப்பை பயிரை விதைத்து, பூ பூக்கும் தருணத்தில், அதை மடக்கி உழுது நிலத்தை தயார் செய்லாம். இவ்வாறு செய்வதால், பருவமழை வந்தவுடன், விதைப்புக் கருவி கொண்டு விதைப்பதற்கு ஏதுவாக இருக்கும். விதை நேர்த்தி மிகவும் கவனமாக செய்ய வேண்டும்.

நிலக்கடலைக்கு வரிசைக்கு வரிசை, 30 சென்டிமீட்டர், செடிக்கு செடி, 10 சென்டிமீட்டர் இடைவெளியும் விட்டு விதைக்க வேண்டும். நிலக்கடலை பயிருக்கு ஜிப்சம் இடுவது மிக அவசியம். இதனால் காய்கள் திரட்சியாகவும், அதிக எடை உடையதாகும் உருவாக வழி செய்கிறது. கந்தகச் சத்து நிலக்கடலையில் எண்ணெய்ச் சத்தை அதிகரிக்கிறது. நிலக்கடலை 3 மாத கால பயிராகும். இன்னும் 3 மாதங்களில் நிலக்கடலை அறுவடைக்கு தயாராகும். அதன் பின்னர் நிலக்கடலையை அறுவடை செய்து அதில் உள்ள தோலை உரித்து விற்பனை செய்வோம். 40 கிலோ எடை கொண்ட மூட்டை கடந்த ஆண்டு ரூ.5 ஆயிரம் வரை விற்பனையாகும். தோலை நீக்காமலும் வியாபாரிகள் வாங்கி செல்வார்கள். இந்த நிலக்கடலை அறுவடை முடிந்த பின்னர் கரும்பு பயிரை சாகுபடி செய்வோம் என்றார்.

The post செம்பனார்கோயில் அருகே நிலக்கடலை நடவு பணியில் விவசாயிகள் தீவிரம் appeared first on Dinakaran.

Read Entire Article