சென்னையை போல மாற்றுத்திறனாளிகள் ரசிக்க வேளாங்கண்ணி கடற்கரையில் ரூ.1 கோடியில் சிறப்பு சாலை வசதி

3 weeks ago 4

நாகை: கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகள் பெரும்பாலானோர் கடலில் குளித்து மகிழ்வது வழக்கம். இல்லாவிட்டால் கடற்கரையில் கால்களை நனைத்து விட்டு செல்வார்கள். ஆனால், மாற்றுத்திறனாளிகள் கடற்கரைக்கு வந்தாலும், கடல் நீர் அருகே செல்வதில் பல்வேறு சிக்கல்கள் இருந்தன. இதனால் அவர்கள் தூரத்தில் இருந்தே கடற்கரையின் அழகை ரசிக்க வேண்டிய நிலை இருந்தது.

மாற்றுத்திறனாளிகளின் நலனை கருத்தில் கொண்டு சென்னை மெரினா கடற்கரையில் மரத்திலான சாய்தளத்தை அறிமுகம் செய்தது பொதுமக்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து, 2 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் ரூ.1.1கோடியில் இதுபோன்ற பாதை அமைக்கப்படுகிறது. இதற்கான பணிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டு பணிகளை விரைவுபடுத்தியுள்ளார். இதையடுத்து இந்த புதிய சாய்தளம் பெசன்ட்நகர் கடற்கரையில் டிசம்பருக்குள் முடிக்கப்படும் என தெரிகிறது.

இதைபோல், நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி, சென்னை திருவான்மியூர் உள்ளிட்ட தமிழ்நாடு முழுவதும் உள்ள கடற்கரை பகுதியில் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில், நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி பேராலயத்திற்கு தமிழ்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் வேளாங்கண்ணி கடற்கரை அழகையும் கண்டு ரசித்து செல்வார்கள்.

வேளாங்கண்ணி கடற்கரைக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் வங்ககடலின் அலைஓசையை கேட்டு பல மணி நேரம் கடற்கரையில் மெய்மறந்து தங்களது குடும்பத்துடன் இருப்பார்கள். இவ்வாறு வேளாங்கண்ணி கடற்கரையின் அழகை ரசிக்க குடும்பத்தோடு வரும் சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்தில் மாற்றுத்திறனாளி இருந்தால் அழைத்து வர முடியாத நிலை இருந்தது. கடற்கரைக்கு செல்லும் பாதை மதியம் நேரங்களில் சூடாக இருப்பதால் மாற்றுத்திறனாளிகளை அழைத்து செல்வதில் சிரமம் இருந்தது.

தொடர்ந்து, வேளாங்கண்ணி பேரூராட்சி சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு தனியாக சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி சென்னைக்கு சில மாதங்களுக்கு முன்பு அனுப்பி வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து, வேளாங்கண்ணி கடற்கரைக்கு வரும் மாற்றுத்திறனாளிகள் வேளாங்கண்ணி கடற்கரையை கண்டு ரசிப்பதற்கு ரூ.1கோடி மதிப்பில் ‘சிறப்பு சாலை வசதி’ அமைக்கப்படவுள்ளது.

இந்த சாலை வேளாங்கண்ணி பேராலயத்தின் தேர்செல்லும் சாலை, புதிய பூங்கா சாலை தொடங்கி கடற்கரை சாலை வரை 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்படவுள்ளது. இந்த சாலை அமைந்ததும் மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி வேளாங்கண்ணி கடற்கரையின் அழகை கண்டு ரசிக்க முடியும். முக்கியமாக, மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் சிரமம் இன்றி நடக்க இந்த நடைபாதையின் இருபுறங்களிலும் மரத்தால் ஆன கைப்பிடிகள் அழகுற அமைக்கப்பட இருக்கிறது. சக்கர நாற்காலிகளை பயன்படுத்துவோர் இந்த சிறப்பு பாதை வழியாக கடலின் அருகே சென்று அலைகளில் கால்களை நனைத்து மகிழ்ச்சி அடையலாம்.

The post சென்னையை போல மாற்றுத்திறனாளிகள் ரசிக்க வேளாங்கண்ணி கடற்கரையில் ரூ.1 கோடியில் சிறப்பு சாலை வசதி appeared first on Dinakaran.

Read Entire Article