சென்னையை உலுக்கிய சிறுமி கொலை: 6 பேருக்கு 16-ம் தேதி வரை நீதிமன்ற காவல்

2 months ago 14

சென்னை,

சென்னை, அமைந்தகரை, மேத்தா நகர் பகுதியைச் சேர்ந்த சர்புதீன் என்பவர் கடந்த 1-ம் தேதி கே-3 அமைந்தகரை காவல் நிலையத்தில் 14 வயது சிறுமி இறந்து போனது தொடர்பாக கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சந்தேக மரணம் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

போலீசாரின் விசாரணையில் இறந்து போனவர் 14 வயது சிறுமி என்பதும் அவரது சொந்த ஊர் தஞ்சாவூர் மாவட்டம் என்பதும், சிறுமி கடந்த டிசம்பர் மாதம் 2023-ம் ஆண்டு முதல் முகமது நிஷாத் என்பவரின் குழந்தை பராமரிப்பாளராக பணியாற்றி வந்துள்ளார் என்பதும் தெரியவந்தது. மேலும் போலீசாரின் விசாரணையில் இறந்து போன சிறுமியின் உடலில் காயங்கள் இருப்பது தெரியவந்தது.

எனவே மேற்கண்ட வீட்டில் வசித்த முகமது நிஷாத் மற்றும் அவரது மனைவி நிவேதா (எ) நாசியா, நண்பர்களான லோகேஷ் மற்றும் அவரது மனைவி ஜெயசக்தி, அவர்களது வீட்டு வேலைக்கார பெண்மணி மகேஸ்வரி, முகமது நிஷாத்தின் சகோதரி சீமா பேகம் ஆகியோரிடம் போலீசார் விசாரணை செய்ததில் அவர்கள் கடந்த 3 மாதங்களாக சிறுமியை அடிக்கடி சித்ரவதை செய்தும்,சிகரெட்டால் சூடு வைத்தும், துன்புறுத்தியும் வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 31.10.2024 அன்று சிறுமியை தாக்கியதில் அவர் இறந்துள்ளது தெரியவந்தது.

அதன் பேரில் மேற்கண்ட சந்தேக மரணம் வழக்கானது கொலை வழக்கு மற்றும் போக்சோ சட்டப்பிரிவுகளுக்கு மாற்றம் செய்யப்பட்டு நிவேதா (எ) நாசியா(30), அவரது கணவர் முகமது நிஷாத்(36), லோகேஷ்(26), அவரது மனைவி ஜெயசக்தி(24), கோவிலம்பாக்கத்தைச் சேர்ந்த மகேஸ்வரி(40) மற்றும் முகமது நிஷாத்தின் சகோதரி அடையாரைச் சேர்ந்த சீமா பேகம்(39) ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

இந்தநிலையில், கைது செய்யப்பட்ட 6 நபர்களும் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் போலீசார் இன்று ஆஜர்படுத்தினர். இதனையடுத்து கைது செய்யப்பட்ட தம்பதி உட்பட 6 பேருக்கும் வரும் 16-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர்ந்து 6 பேரையும் புழல் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது. நீதிமன்ற உத்தரவுப்படி 6 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Read Entire Article