சென்னை: சென்னையில் சில பகுதிகள் மூழ்கியுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. குறிப்பாக சென்னையில் வேகமாக மூழ்கும் பகுதியாக தரமணி இருப்பதாக என்.டி.யூ கண்டறிந்துள்ளது. சிங்கப்பூரின் நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (என்.டி.யூ) மேற்கொண்ட ஆய்வில், உலகம் முழுவதிலும் கவலைப்படத்தக்க வகையில் வேகமாக மூழ்கி வரும் கடலோர நகரங்கள் குறித்த ஆய்வு ஒன்று வெளியாகியுள்ளது. ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் உள்ள சுமார் 48 நகரங்கள் எந்தளவுக்கு மூழ்கி வருகின்றன என்பது குறித்து ஆய்வுக்குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். காலநிலை மாற்றத்தால் உந்தப்பட்ட கடல் மட்ட உயர்வால் நிலப்பகுதிகள் மூழ்கும் அபாயம் கொண்ட நகரங்கள் இவை. ஆய்வுகள் மற்றும் ஐ.நா.வின் மக்கள்தொகை தரவுகள் வாயிலாக இந்த பகுதிகளில் கிட்டத்தட்ட 16 கோடி மக்கள் வாழ்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து சென்னை உள்பட 5 நகரங்கள் இந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளன. அதில், 2014ம் ஆண்டிலிருந்து 2020ம் ஆண்டு வரை ஆண்டுக்கு சராசரியாக 0.01 செ.மீ-3.7 செ.மீ என்ற அளவில் சென்னையின் சில பகுதிகள் மூழ்கியுள்ளதாக என்.டி.யூ. ஆய்வு தெரிவிக்கிறது. சென்னையில் வேகமாக மூழ்கும் பகுதியாக தரமணி இருப்பதாக என்.டி.யூ கண்டறிந்துள்ளது. அந்த பகுதி ஆண்டுக்கு சராசரியாக 3.7 செ.மீ அளவுக்கு மூழ்குவதாக அந்த ஆய்வு கூறுகிறது. இது 2024ம் ஆண்டில் கடல் மட்டத்தில் ஏற்பட்ட 0.59 செ.மீ உயர்வுடன் ஒப்பிடப்படுகிறது என, நாசாவால் வழிநடத்தப்பட்ட ஆய்வு கூறுகிறது. விவசாயம், தொழில் மற்றும் வீட்டுப் பயன்பாடுகளுக்கு அதிகளவில் நிலத்தடி நீர் உறிஞ்சப்படும் பகுதிகள் வேகமாக மூழ்கிவருவதாக சென்னையில் உள்ள நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதை தடுக்க நிலத்தடி நீர் மேலாண்மை, நீர்நிலைகளை வரைபடமாக்குதல், சுற்றுச்சூழல் தாக்க அறிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறதா என்பதை உறுதி செய்வதற்காக கட்டுமானங்களை கண்காணித்தல் போன்ற பல்வேறு திட்டங்களை அரசு உருவாக்கியுள்ளது. அதேபோல், இந்தியாவில், குஜராத், மும்பை, கொல்கத்தா போன்ற நகரங்கள் மூழ்கி வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
The post சென்னையில் வேகமாக மூழ்கும் பகுதி தரமணி: ஆய்வில் தகவல் appeared first on Dinakaran.