சென்னை : சென்னை முழுவதும் 75 இடங்களில் கனமழை பதிவாகியுள்ளது. சென்னையில் இன்று காலை 8.30 மணி வரை 75 இடங்களில் கனமழை பதிவாகி உள்ளது. தமிழகத்தின் வட மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு அதிகனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக சென்னைக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்டும் நாளைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. அது போலவே சென்னை நகரம் முழுவதும் பரவலாக இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் சராசரியாக 8 செ.மீ.க்கு மேல் கனமழை பதிவாகியுள்ளது.இதுவரை தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை 84% கூடுதலாக பெய்துள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் 75 இடங்களில் மழைமானிகள் வைக்கப்பட்டு மழை அளவு கண்காணிக்கப்பட்டு வருகிறது. மணலி சுற்று வட்டார இடங்களில் 9 செ.மீ. அளவுக்கு மழை பெய்துள்ளது.காலை 8.30 மணி வரை மணலி, கொளத்தூர், அண்ணாநகர் மலர் காலனி உள்ளிட்ட 12 இடங்களில் 9 செ.மீ. மழை பெய்துள்ளது.ராயபுரம், சென்னை பாரிமுனை, கோடம்பாக்கம், அம்பத்தூரில் 8 செ.மீ. மழை பெய்துள்ளது. சோழிங்கநல்லூர், தேனாம்பேட்டை, உத்தண்டி, வானகரம், மாதவரம், நுங்கம்பாக்கம், பெரம்பூர், மதுரவாயல், முகலிவாக்கத்தில் 7 செமீ மழைப் பொழிந்துள்ளது.
மீனம்பாக்கம், அயனாவரம், திருவல்லிக்கேணி, டிஜிபி அலுவலக பகுதிகளில் 6.8 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. சென்னை அடையாறு, வளசரவாக்கம் உள்ளிட்ட இடங்களில் 6.5 செ.மீ. மழை பெய்துள்ளது. இதனிடையே தமிழ்நாட்டில் நேற்று ஒரு இடத்தில் மிக பலத்த மழையும் 40 இடங்களில் பலத்த மழையும் பெய்துள்ளது. கும்மிடிப்பூண்டி, எண்ணூரில் தலா 10 செ.மீ., மணலி, சென்னை அண்ணாநகரில் தலா 9 செ.மீ. மழை பெய்துள்ளது. சென்னை கொளத்தூர், திரு.வி.க.நகர், பொன்னேரி, ராயபுரத்தில் தலா 9 செ.மீ. மழை பெய்துள்ளது.
The post சென்னையில் வெளுத்து வாங்கும் மழை.. இன்று காலை 8.30 மணி வரை 75 இடங்களில் கனமழைப் பதிவு!! appeared first on Dinakaran.