சென்னையில் வரும் 29ம் தேதி அரசு பள்ளி மாணவர்களின் 100 புத்தகங்கள் வெளியீடு: காஞ்சி எழுதுக அமைப்பு ஆலோசகர் தகவல்

3 hours ago 2

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் செயல்படும் புத்தகம் எழுதும் இயக்கத்தின் சார்பில், சென்னையில் வரும் 29ம்தேதி 100 புத்தகங்களை முன்னாள் தலைமை செயலாளர் வெ.இறையன்பு வெளியிட உள்ளார் என்று எழுதுக அமைப்பின் ஆலோசகர் சுகுமாறன் தெரிவித்தார். காஞ்சிபுரம் தண்டபாணி ஓரியண்டல் மேல்நிலைப்பள்ளியில் புத்தகம் எழுதும் இயக்கத்தின் சார்பில், பாரதிதாசன் கவிதைகள் என்ற கருத்தை மையமாக வைத்து, தமிழ் இலக்கிய ஆய்வரங்கம் நேற்று நடந்தது, எழுதுக அமைப்பின் ஆலோசகர் ம.த.சுகுமாறன் தலைமை வகித்தார்.

தண்டபாணி ஓரியண்டல் பள்ளி தலைமை ஆசிரியை தெய்வகுமாரி, நூலகர் பூபதி முன்னிலை வகித்தனர். மாவட்ட முன்னோடி வங்கியின் நிதி ஆலோசகர் அரங்கமூர்த்தி வரவேற்றார். இந்த, ஆய்வரங்கில் காஞ்சிபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட அரசுப்பள்ளி மாணவ, மாணவிகள், “பாரதிதாசன் கவிதைகள்’’ என்ற தலைப்பில் பேசினார்.
பின்னர், எழுதுக அமைப்பின் ஆலோசகர் ம.த.சுகுமாறன் பேசுகையில், “சென்னையில் ஒரே நாளில் 100 அரசுப்பள்ளி மாணவர்களால் எழுதப்பட்ட 100 புத்தகங்கள் வெளியீட்டு விழா வரும் 29ம்தேதி சென்னை மீனம்பாக்கம் ஏ.எம்.ஜெயின் கல்லூரி வளாகத்தில் நடக்கிறது.

விழாவில் தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலாளராக பணியாற்றிய வெ.இறையன்பு பங்கேற்று, 100 அரசு பள்ளி மாணவர்களின் 100 புத்தகங்களை வெளியிட்டு பேசுகிறார்’’ என்றார். இதில் எழுத்தாளர் ப.கதிரவன், பணி ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் அமுதகீதன், தமிழ் ஆசிரியை ரேணுகா பிரபாகரன் ஆகியோர் நடுவர்களாக இருந்தனர். நிகழ்வில் தமிழரசி, சேகர் மற்றும் இயக்க நிர்வாகிகள், தமிழ் ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post சென்னையில் வரும் 29ம் தேதி அரசு பள்ளி மாணவர்களின் 100 புத்தகங்கள் வெளியீடு: காஞ்சி எழுதுக அமைப்பு ஆலோசகர் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article