சென்னையில் ரூட் தல விவகாரத்தில் நடந்த கல்லூரி மாணவர்கள் மோதலில் மாணவர் உயிரிழப்பு..!!

1 month ago 8

சென்னை: சென்னையில் ரூட் தல விவகாரத்தில் நடந்த கல்லூரி மாணவர்கள் மோதலில் ஒரு மாணவர் உயிரிழந்தார். சென்னையில் 50க்கும் மேற்பட்ட கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. ஆனால் ரயில்வே போலீசாருக்கு மிகவும் பிரச்சனையாக இருக்கக்கூடிய கல்லூரிகளில் பச்சையப்பன் கல்லூரி, மாநில கல்லூரி, கொருக்குப்பேட்டையில் உள்ள தியாகராய கல்லூரி மற்றும் நந்தனம் அரசு கல்லூரி. இத்தகைய 4 கல்லூரி மாணவர்கள் அடிக்கடி ரயிலில் செல்லும் போது ஒருவருக்கொருவர் மாறி மாறி தாக்கி கொள்ளகூடிய சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.

அந்த வகையில், சென்னையை அடுத்த திருவள்ளூர் மாவட்டம் பொன்பாடி பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன் இவரது மகன் சுந்தர் பிரசிடண்சி கல்லூரியில் பி.ஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 4ஆம் தேதி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே சுந்தர் வந்த போது பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் முன்விரோதம் காரணமாக மறைத்து வைத்திருந்த பட்டா கத்திகளை வைத்து சரமாரியாக தாக்கினர். ரத்த வெள்ளத்தில் இருந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு ராஜிவ் காந்தி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஏற்கனவே கைது செய்யப்பட்ட சந்துரு, யுவராஜ், ஈஸ்வரன், ஹரிபிரசாத் என்கிற புஜ்ஜி, காமலேஸ்வரன் ஆகிய 5 பேர் மீது தற்போது ரயில்வே போலீசார் கொலை வழக்காக மாற்றம் செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். ரயில் நிலையத்திலோ, ரயிலிலோ போராட்டத்தில் ஈடுபட்டால் உடனடியாக கைது நடவடிக்கை எடுக்கப்படும். பெற்றோர்கள் மாணவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும் எனவும் ரயில்வே போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

The post சென்னையில் ரூட் தல விவகாரத்தில் நடந்த கல்லூரி மாணவர்கள் மோதலில் மாணவர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Read Entire Article