சென்னை: சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்கத்தில் தமிழ்நாடு மின் பகிர்மான கழக சென்னை மற்றும் காஞ்சிபுரம் மண்டல அனைத்து பொறியாளர்களுடன் வடகிழக்கு பருவமழை மற்றும் எதிர்வரும் கோடைகாலத்தில் தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கான முன்னேற்பாடுகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், சென்னை மற்றும் காஞ்சிபுரம் மின் பகிர்மான மண்டலங்களில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட திட்ட முன்னேற்ற பணிகள் குறித்து ஆய்வு செய்த அமைச்சர், இந்த பகுதிகளில் 30 நிமிடங்களுக்கு மேல் மின் தடங்கல் ஏற்பட்ட நிகழ்வுகள் குறித்து ஒவ்வொரு பிரிவு அலுவலரிடமும் அதற்கான காரணத்தையும் கேட்டறிந்தார். இதுதவிர, மழைக்காலங்களின் போது தண்ணீர் தேங்குவதால் பில்லர் பாக்ஸ்கள் பழுதடைவதை தடுக்கும் வகையில், சென்னை மற்றும் காஞ்சிபுரம் மண்டலங்களில் இதுவரை 6024 பில்லர் பாக்ஸ்கள் தரை மட்டத்திலிருந்து ஒரு மீட்டர் அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளதை போல், மீதமுள்ள 503 பில்லர் பாக்ஸ்களை உயர்த்தும் பணிகளை துரிதமாக முடிக்கவும் அறிவுறுத்தினார்.
மேலும், சென்னை மற்றும் காஞ்சிபுரம் மின் பகிர்மான மண்டலங்களில் இதுவரை 5,433 வளைய சுற்றுத்தர அமைப்புகள் ரூ.785 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டு பணிகள் முழுவதுமாக நிறைவடைந்துள்ளதாகவும், சென்னை மண்டலத்தில் கூடுதலாக 310 வளைய சுற்றுத்தர அமைப்புகள் ரூ.51 கோடி செலவில் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் எடுத்துரைத்தனர். எதிர்வரும் கோடைகால மின் பளுவினை எதிர்கொள்ளும் விதமாக, சென்னை மண்டலத்தில் மாதவரம் ரேடியன்ஸ், மகாகவி பாரதியார் நகர், பருத்திப்பட்டு, சதர்ன் அவென்யூ, சோழவரம், புதுப்பேட்டை, முண்டக்கன்னியம்மன் கோவில், டேவிட்சன் தெரு, கணேஷ் நகர் ஆகிய 9 இடங்களில் துணை மின் நிலையங்கள் ரூ.176 கோடி மதிப்பீட்டில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அதேபோல், காஞ்சிபுரம் மண்டலத்தில் ஏஏஐ ஊழியர்கள் குடியிருப்புகள், மாங்காடு ஆல்டிஸ், அரசன்கழனி மற்றும் குறிஞ்சி நகர் ஆகிய 4 இடங்களில் துணை மின் நிலையம் ரூ.96.20 கோடி செலவில் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். மேலும், சென்னை மண்டலத்தை பொறுத்தவரை தற்போது துணைமின் நிலையங்களில் இயக்கத்தில் உள்ள 16 மின் மாற்றிகளின் திறனை தரம் உயர்த்திடவும், இதே போன்று, காஞ்சிபுரம் மண்டலத்தில் 5 மின் மாற்றிகளின் திறனை தரம் உயர்த்திடும் பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
The post சென்னையில் ரூ.176 கோடி மதிப்பீட்டில் 9 துணை மின்நிலையம் அமைக்க திட்டம்: அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல் appeared first on Dinakaran.