சென்னையில் முதல்வர் மருந்தகம் அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்பு

2 months ago 13

சென்னை,

சென்னை மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் கூடுதல் பதிவாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 15.08.2024 சுதந்திர தினவிழா உரையில், "பொதுப்பெயர் (ஜெனரிக்) மருந்துகளையும் பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில் முதற்கட்டமாக 1,000 முதல்வர் மருந்தகங்கள் துவங்கப்படும்" என அறிவித்தார். முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள B.Pharm/D.Pharm சான்று பெற்றவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதலுடன் தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் மருந்தகம் அமைக்க www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ள தொழில் முனைவோர் 20.11.2024 வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ளவர்களுக்கு 110 சதுரஅடிக்கு (10Sqm) குறையாமல் சொந்த இடம் அல்லது வாடகை இடம் இருக்க வேண்டும். சொந்த இடம் எனில் அதற்கான சான்றிதழ்களான சொத்துவரி ரசீது (அல்லது) குடிநீர்வரி ரசீது (அல்லது) மின் இணைப்பு ரசீது, வாடகை இடம் எனில் இடத்திற்கான உரிமையாளரிடம் இடம் ஒப்பந்தப்பத்திரம் (Rental Agreement Documents) பெற்று விண்ணப்பத்துடன் இணைத்து விண்ணப்பிக்கலாம்.

முதல்வர் மருந்தகம் அமைக்கும் தொழில் முனைவோருக்கு அரசு மானியம் ரூ.3 லட்சம் இரண்டு தவணைகளாக ரொக்கமாகவும் மருந்துகளாகவும் வழங்கப்படும். தொழில் முனைவோருக்கு முதல்வர் மருந்தகம் அமைப்பதற்கு கூடுதல் நிதி தேவைப்படும் நிலையில் கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் பெற வழிவகை செய்யப்படும்.

TABCEDCO, THADCO மற்றும் TAMCO பயனாளிகளும் இதில் விண்ணப்பிக்கலாம். தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்குப் பயிற்சி அளித்து முதல் தவணை மானியத்தொகை ரூ.1.50 லட்சம் விடுவிக்கப்படும். முதல்வர் மருந்தகம் அமைக்க தேர்வு செய்யப்படும் தொழில் முனைவோர் முதல்வர் மருந்தகத்திற்கு உட்கட்டமைப்பு வசதிகளான ரேக்குகள், குளிர்சாதனப்பெட்டி, ஏசி மற்றும் மருந்துகள் வைப்பதற்கான பெட்டிகள் நிறுவப்பட்ட பிறகு இறுதிக்கட்ட மானியம் ரூ.1.50 லட்சம் மதிப்பிற்கு மருந்துகளாக வழங்கப்படும். விற்பனைக்கு ஏற்ற ஊக்கத்தொகை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Read Entire Article